
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அ.தி.மு.க.வில் கட்சி பணிகள் மேற்கொள்ள 82 மாவட்ட பொறுப்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நியமித்திருந்தார். அதில் முன்னாள் அமைச்சர்களான பொன்னையன், தம்பிதுரை, செம்மலை, வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச் செல்வன், செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்டவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மற்றொருபுறம் பா.ஜ.க.வுடன் மீண்டும் அ.தி.மு.க .கூட்டணி வைத்ததற்கு அக்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் எனப் பலரும் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். அதே சமயம் பா.ஜ.க. - அ.தி.மு.க. இடையே கூட்டணி உறுதியான பிறகு ஓ.பி.எஸ். அந்த கூட்டணியில் நீடிப்பாரா? என்ற கேள்வி அவரது ஆதரவாளர்கள், அரசியல் விமர்சகர்கள், பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் எழுந்திருந்தது.
இந்நிலையில் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவைச் சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான வைத்தியலிங்கம் எம்.எல்.ஏ. இன்று (14.05.20250 செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ‘பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு நீடிக்கிறதா?’ என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் பதிலளித்துப் பேசுகையில், “ஆலோசனைக் கூட்டம் நாளைக்கு (15.05.2025) தான் முடிகிறது. இந்த கூட்டம் முடிந்த பிறகு ஓ. பன்னீர்செல்வம் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துப் பேசுவார். அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் எதிர்கால அரசியல், தேர்தல், கட்சி வளர்ச்சி குறித்த கூட்டம் நடைபெற்று வருகிறது. எனவே இந்த கூட்டம் முடிந்த பிறகு இறுதியாகக் கூட்டணி குறித்து நாளை மாலை ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பார்” எனத் தெரிவித்தார்.