
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, பஹல்காம் உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு ராணுவத்தினர் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை நடத்தி வருகின்றனர். காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளைப் பிடிக்க ட்ரோன் கேமராக்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. மேலும் ஹெலிகாப்டர்கள் மூலம் மலைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாகப் பயங்கரவாதிகளுக்கும், இந்திய ராணுவப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
இந்நிலையில் ஜம்மு & காஷ்மீர் ராம்பன் மாவட்டத்தில் உள்ள பேட்டரி சாஷ்மா என்ற இடத்தில் உள்ள பள்ளத்தாக்கில் சுமார் 200 - 300 மீட்டர் பள்ளத்தாக்கில் ஒரு ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி ராணுவ வாகனத்தில் இருந்த 3 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காவல்துறையினர், துணை ராணுவப் படையினர், ராணுவத்தினர் மற்றும் உள்ளூர்வாசிகள் மீட்புப் பணியை மேற்கொண்டனர். ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு வாகனத் தொடரணியுடன் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் ராம்பன் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுகிறது எனப் பட்டோடு காவல் நிலையம் இருப்பிட அதிகாரி விக்ரம் பரிஹார் தெரிவித்துள்ளார்.