
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் சில இடங்களில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில் மே ஆறாம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை பொழிந்து வருகிறது. சென்னை குன்றத்தூர் பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக திடீரென தரைக்காற்று வீசத் தொடங்கியது. புழுதிக் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அதனைத் தொடர்ந்து பலத்த காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது.
ஆயிரம்விளக்கு, தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், கிண்டி, பரங்கிமலை, பள்ளிக்கரணை, மேடவாக்கம், தாம்பரம், குரோம்பேட்டை, வண்டலூர், பல்லாவரம், முடிச்சூர், சேலையூர் ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பொழிந்து வருகிறது.
இன்று கோவை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கரூர், திருச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளையும், நாளை மறுநாளும் கோவை, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுத்துள்ளது.