அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் மூன்று முக்கிய ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பதாகவும் அதன் காரணமாக அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நீட் தேர்வு முடிவுகள், அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட விவரங்கள் குறித்து பேசினார். இந்தப் பேட்டியில், சமீபத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். ஆகியோர் சந்திக்க வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் பரவின. ஆனால், அமித்ஷா இருவரையும் சந்திக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அண்ணாமலை தெரிவித்த கருத்தும் அதற்கு அதிமுகவினரின் எதிர்வினையும் அதிமுக பாஜக கூட்டணி அரசியலை பரபரக்கச் செய்தது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை அது குறித்து பேசினார். அவர் தெரிவித்ததாவது; “பாஜக தமிழ்நாட்டில் தனியாக ஒரு கூட்டணியை அமைக்கிறதா எனும் கேள்வி பரவலாக எழுந்து வருகிறது. குறிப்பாக வேலூர் கூட்டத்தில் ஏ.சி.சண்முகம் இருந்தார். அமித்ஷா சந்தித்த 25 நபர்களில் இரண்டு மூன்று அரசியல் நபர்கள் இருந்தார்கள் என நேற்று ஒருவர் கேட்டார்.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அமித்ஷா என்னிடம், ‘எடப்பாடியை சந்திக்க வேண்டும். அவருடன் உணவு சாப்பிடலாம். அவர் சென்னையில் இருக்கிறாரா’ என கேட்க சொன்னார். நான் தான் எடப்பாடிக்கு ஃபோன் செய்தேன். அப்போது அமித்ஷாவும் அருகில் இருந்தார். ஆனால், காலில் ஒரு சிறு பிரச்சனை காரணமாக எடப்பாடி சேலத்தில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார்” என்றார்.