
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் வரும் ஏப்ரல் 4- ஆம் தேதி மாலையுடன் நிறைவடையும் நிலையில், அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நட்சத்திரப் பேச்சாளர்கள் வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தேசியத் தலைவர்கள் தமிழகத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இடைவெளியின்றி தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக கமல்ஹாசன் மதுரைக்கு வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவருக்கு கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், "தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறை சோதனை ஒரு மிரட்டல் யுக்தியாக இருக்கும். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தற்காலிகமானது என ஓ.பி.எஸ். புரிந்து கொண்டது சந்தோஷம். இலங்கைத் தமிழர்கள், தமிழர்கள் என மத்திய அரசு வெவ்வேறாகப் பார்க்கிறது. ஜனநாயக நாடு யார் வேண்டுமானால் எதை வேண்டுமானாலும் கூறலாம்" என்றார்.
அதைத் தொடர்ந்து, தேர்தல் பிரச்சாரத்தின் போது கமல்ஹாசன் கூறியதாவது, "நான் பா.ஜ.க.வின் B டீம் இல்லை; காந்தியின் A டீம். வீரத்தின் உச்சக்கட்டம் அஹிம்சை. மக்கள் நீதி மய்யம் வன்முறையைக் கையில் எடுக்காது; சட்டத்தை மட்டுமே கையில் எடுக்கும். ஊழல் கட்சிக்கு மாற்று மற்றொரு ஊழல் கட்சி இல்லை. புதிய வாக்காளர்கள் அரசியலைப் புரட்டிப் போட உள்ளனர்" எனத் தெரிவித்தார்.