
தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை விமர்சித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதில், 'தோல்வி கூட்டணியை மீண்டும் உருவாக்கி இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. புலனாய்வு அமைப்புகளின் சோதனைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணி தோல்வி கூட்டணி; ஊழல் கூட்டணி. தொடர் தோல்வியை அதிமுக-பாஜக கூட்டணிக்கு கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள். அதிமுகவை அடமானம் வைத்தவர்கள் தமிழ்நாட்டை அடமானம் வைக்க துடிக்கிறார்கள்.
எந்த கொள்கையின் அடிப்படையில் அதிமுக-பாஜக கூட்டணி வைத்துள்ளார்கள்? ஜெயலலிதா கட்சியுடன் கூட்டணி வைக்கும் போது பேசத் தகுதியான வார்த்தையா ஊழல்? பதவி மோகத்தின் தமிழ்நாட்டின் சுயமரியாதை மற்றும் உரிமைகளை டெல்லியிடம் அடமானம் வைத்தவர் எடப்பாடி பழனிசாமி. இது மணிப்பூர் அல்ல, அமைதியான மாநிலத்துக்குள் வந்து அமைதியை குலைக்க பார்க்கிறார் அமித்ஷா.

தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் சிதைத்து சீரழிக்க நினைக்கிறது பாஜக. அதிமுகவின் தலைமையை மிரட்டிப் பணிய வைத்து தன்னுடைய சதித் திட்டங்களை பாஜக நிறைவேற்றப் பார்க்கிறது. பாஜக தனியாக வந்தாலும் எவர் துணையோடு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். டெல்லிக்கு மண்டியிட்டு தமிழ்நாட்டை அடகு வைக்கும் துரோகக் கூட்டத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க விடையளிப்பார்கள்' என கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் அதிமுக-பாஜக கூட்டணியை விமர்சித்த மு.க.ஸ்டாலினை பதிலுக்கு விமர்சித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'எக்ஸ்' வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தினமும் என்ன பிரச்சனை வரப்போகிறது என்று தன் தூக்கம் தொலைந்துவிட்டதாக ஒருமுறை திமுக பொதுக்குழுவில் சொன்னார். நேற்று முன்தினம் அவருடைய அமைச்சர் பொன்முடியின் அருவருக்கத்தக்க ஆபாசப் பேச்சு அவர் தூக்கத்தை கெடுத்தது. இன்றோ, அஇஅதிமுக-வின் கூட்டணி அறிவிப்பு இடிபோல் வந்து அவருக்கு இறங்கியுள்ளது போலும்!
பீதியின் உச்சத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். தி.மு.க. செய்த வரலாற்றுப் பிழைகள் இந்த கூட்டணி மூலம் திருத்தி எழுதப்படும் என்று நேற்று நான் எனது பதிவு வாயிலாக தெரிவித்தேன். தமிழ்நாட்டு நலனுக்கான "குறைந்தபட்ச செயல் திட்டம்" இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார்.

"என்னவா இருக்கும்?" என்று இரவு முழுக்க தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், காலையில் தனது மொத்த வரலாற்றுப் பிழைகளையும் வெற்று நாடகங்களையும் தொகுத்து அதனை அறிக்கையாக வெளியிட்டுவிட்டார். மணிப்பூர் மாநிலப் பிரச்சனைகள் பற்றி உங்களுக்கு இருக்கும் அக்கறை, துளியாவது உங்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக பெண்கள் மீது இருந்ததா? அவர்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்த உங்களுக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?
"NEET என்றால் என்ன? அதனை இந்திய நாட்டிற்கே அறிமுகப்படுத்தியது யார்? அதை உச்சநீதிமன்றம் வரை வாதாடி நிலைபெறச் செய்தது எந்த கூட்டணி?"- இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு, பிறகு நீட் பற்றி பேசுங்கள்! மு.க.ஸ்டாலின் அவர்களே. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது!
ஒருபோதும் தமிழ்நாட்டை, நம் மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காது! மாறாக, நமக்கான மாநில உரிமைகளை பெற்றுத் தரவே செய்யும்! காவிரி உரிமையை பெங்களூரிலும், முல்லைப் பெரியாறு அணை உரிமையை திருவனந்தபுரத்திலும் அடகு வைத்த தி.மு.க.வின் தலைவர் அதைப் பற்றி கவலைப் பட வேண்டாம்! தமிழ்நாடு விரோத தி.மு.க. வின் ஊழல் ஆட்சியை தோலுரித்து, மக்களின் பேராதரவோடு அதிமுக தலைமையிலான கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடும்!
(பி.கு. : ரெய்டுகளுக்கு பயந்து, "தொட்டுப் பார்- சீண்டிப் பார்" வீடியோ கூட வெளியிட முடியாத அளவிற்கு தொடை நடுங்கிக் கொண்டிருப்பது யார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்!)' என தெரிவித்துள்ளார்.