
மத்திய பாஜக அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளது. இதன் மீதான ஓட்டெடுப்பு வெள்ளிக்கிழமை நடக்கிறது.
இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், அனந்தப்பூர் தொகுதி எம்.பி.யுமான ஜே.சி.திவாகர் ரெட்டி கூறியதாவது,
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று தெலுங்கு தேசம் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார். எனினும் நான் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை பாராளுமன்ற நடவடிக்கையில் பங்கேற்க மாட்டேன். கொறடா உத்தரவை மீறக்கூடாது என்பது விதிமுறை. எனினும் பாராளுமன்ற புறக்கணிப்பை கைவிட நான் தயாராக இல்லை. மத்தியில் உள்ள பாஜக அரசும் சரியில்லை. ஆந்திராவில் உள்ள தெலுங்கு தேசம் அரசும் சிறப்பாக செயல்படுகிறது என்று கூறமுடியவில்லை.
ஒட்டுமொத்த அரசியல் அமைப்பு மீதே எனக்கு அதிருப்தியும், அவநம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. இதனால்தான் பாராளுமன்ற நடவடிக்கையில் வெள்ளிக்கிழமை கலந்துகொள்வதில்லை என்ற முடிவை நான் எடுத்துள்ளேன். இவ்வாறு கூறியுள்ளார்.