Skip to main content

“தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கும் சட்ட மசோதாவை திரும்பப்பெற வேண்டும்” - இ.பி.எஸ் எச்சரிக்கை!

Published on 22/04/2023 | Edited on 22/04/2023

 

Edappadi Palaniswami opposes 12-hour work bill

 

தமிழகத் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் விதமாக கொண்டுவரப்பட்டுள்ள 12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சித்துள்ளார். 

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனி மனித வாழ்க்கையிலும், அரசியலிலும் இரட்டை வேடம் போடுவதையே வாடிக்கையாகக் கொண்ட இன்றைய ஆட்சியாளர்கள், தமிழக தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் வேலையை கனக்கச்சிதமாக செய்துள்ளனர். 8 மணி நேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம் என்பதை நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தொழிலாளர்கள் தங்களது அடிப்படை உரிமையாக கடைப்பிடித்து வருகிறார்கள். கடந்த 2020-ஆம் ஆண்டில் மத்திய அரசு தொழிலாளர் வேலை சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தது. வாரத்தில் 4 நாட்கள் குறைந்தபட்சம் 48 மணி நேர வேலை, 3 நாட்கள் விடுமுறை என்பது அந்தச் சட்டத்தின் ஷரத்து.

 

தகவல் தொழில்நுட்ப துறைகளிலெல்லாம் 8 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்குவதாலும், உரிய சம்பளம் தராமல் இருப்பதாலும் பணியாளர்களின் உரிமையை நிலைநாட்ட இந்தச் சட்டம் கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு மாநில அரசும் அவர்களின் விருப்பத்திற்கேற்ப இந்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தது. அப்போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இந்தச் சட்டத்தை எதிர்த்து பேசினார். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களைப் போல் மத்திய அரசுக்கு தலையாட்டாமல் தமிழகத்தில் இந்தச் சட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்று, எனது தலைமையிலான அம்மாவின் அரசுக்கு கெடு விதித்தார். அன்று மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கையை இன்று அவரே படித்துப் பார்க்க வேண்டும்.

 

தமிழக மக்களின் நலனுக்காகவும், தமிழக மக்களின் தேவையை பூர்த்தி செய்யவும், அம்மாவின் அரசால் மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதப்படும் போதெல்லாம் எங்களைப் பார்த்து கேலி பேசிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய அரசு கொத்தடிமையாக மாறி 21.4.2023 அன்று தமிழகத் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் விதமாக, 12 மணி நேர கட்டாய வேலை திருத்தச் சட்டத்தை தமிழக சட்டமன்றத்தில் ஒருதலைபட்சமாக நிறைவேற்றியதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். திமுக அரசு செய்யும் அனைத்து செயல்களுக்கும் தலையாட்டும் அதன் கூட்டணிக் கட்சிகளே, இந்த சட்டத்தை எதிர்த்துப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்திருப்பது, இந்த அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

 

நீட் பிரச்சனையா? மத்திய அரசை கைகாட்டுவது; பெட்ரோல், டீசல் விலை உயர்வா? தன்பொறுப்பை தட்டிக் கழித்து மத்திய அரசை கைகாட்டுவது; மின் கட்டண உயர்வா? மத்திய அரசை துணைக்கு அழைப்பது; வீட்டு வரி, சொத்து வரி உயர்வா? மத்திய அரசு உத்தரவிட்டதால் செய்கிறோம் என்று சொல்வது; தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள நில எடுப்பு செய்யும்போது, எதிர்க்கட்சியாக இருக்கும் போது எதிர்ப்பதும்; தற்போது ஆளும் கட்சியானவுடன், நிலங்களை வலுக்கட்டாயமாக பறிப்பதும் என்று போலி நாடகம் ஆடுவது; அதேபோல், நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத் திட்டத்திற்கு மக்களின் விளை நிலங்களை வலுக்கட்டாயமாகப் பறித்து நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திடம் ஒப்படைப்பது, என்று நிரந்தர அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துள்ள இந்த திமுக அரசுக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றியோ, பத்தாண்டு கால தன்னலமற்ற எங்களின் மக்கள் சேவையைப் பற்றியோ குறை கூற எந்த அருகதையும் கிடையாது.

 

அம்மாவின் அரசு ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது, தமிழக மக்களுக்கு எதிரான எந்த ஒரு திட்டத்தையும் அனுமதித்ததில்லை. ஆனால், இந்த திராவிட மாடல் திமுக அரசு மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுவதை கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது. ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி, அதை உண்மையாக்கிவிடலாம் என்ற கோயபல்ஸ் தத்துவத்தைக் கடைப்பிடிக்கும் இந்த அரசின் முதலமைச்சர் தன்னிலை உணர்ந்து மக்கள் விரோதச் செயல்பாடுகளை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தொழிலாளர் விரோத சட்டத்தை உடனடியாக இந்த அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், தமிழகத் தொழிலாளர்களின் நலனைக் காக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று எச்சரிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.