TMC Senior leader Gnanadesikan passes away

Advertisment

த.மா.கா. மூத்த தலைவர் ஞானதேசிகன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில்காலமானார்.வழக்கறிஞரான ஞானதேசிகன், மூப்பனாருடன் நெருக்கமாக இருந்ததால், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் உருவானபோது அவருடன் சேர்ந்தே ஞானதேசிகன் செயல்பட்டார்.

த.மா.கா.வில் முக்கிய பதவிகளை வகித்துவந்தார். பின்னாளில் ஜி.கே.வாசன் தலைமையில் த.மா.கா., காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தபோது, தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பொறுப்பு வகித்தார். காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினராகவும் பதவி வகித்தார். 2012ஆம் ஆண்டு நக்கீரன் அலுவலகம் அ.தி.மு.க. ஆட்சியாளர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டபோது, தி.மு.க. தலைவராக இருந்த கலைஞர் கண்டன அறிக்கை வெளியிட்டார். அவரை தொடர்ந்து ஞானதேசிகனும் நக்கீரன் அலுவலகத்தை தாக்கியவர்கள் மீது கண்டன அறிக்கை வெளியிட்டார்.

Advertisment

மதிப்பு மிக்க அரசியலாளர்களில் ஒருவராகவும், பண்பாளராகவும் தமிழக அரசியலில் வலம்வந்தவர். நாடாளுமன்றத்தில் புள்ளிவிவரங்களோடு பேசி அனைவரையும் கவரக்கூடியவர்.அதேபோல் சிறந்த வழக்கறிஞராக பணியாற்றியவர் ஞானதேசிகன்.

TMC Senior leader Gnanadesikan passes away  TMC Senior leader Gnanadesikan passes away  Nakkheeran MD pay Tribute to B.S.Gnanadesikan

மூப்பனார் சிபாரிசில் ஒருவர் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினராக ஆகலாம் என செய்திகள் வெளியானபோது, ஜெய்ந்திநடராஜன், வாசன், தனுஷ்கோடி ஆதித்தன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டவர்களில் யாருக்காவது ஒருவருக்கு சீட் கிடைக்கும் என பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டிருந்தன. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக மூப்பனார் அந்த பதவியை ஞானதேசிகனுக்கு வழங்கினார். காரணம், அந்த அளவிற்கு சட்ட ஞானம் உடையவர், த.மா.கா. மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியிலும் அப்போது மூத்தத்தலைவராக இருந்தவர் ஞானதேசிகன். மூப்பனார் இருந்தபோதும் மூப்பனார் மறைந்த பிறகும் ஜி.கே.வாசனை தலைவராக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர். மூப்பனாரை போன்று கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சி தலைவர்களுடனும் நிர்வாகிகளுடனும் நட்புடன் பழகியவர். அதுமட்டுமின்றி அனைத்து கட்சி தலைவர்களிடத்தில் நன்மதிப்பை பெற்றவர். தொலைக்காட்சி விவாதங்களில் புள்ளி விவரங்களோடு மிகவும் சிறப்பாக வாதம் செய்யக்கூடியவர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி உடல்நலக்குறைவின் காரணமாக சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமானார்.

ஞானதேசிகன் அவர்களை இழந்து வாடும் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் த.மா.கா. கட்சியினருக்கு நக்கீரன் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துகொள்கிறது.