சென்னையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டரும், காஞ்சிபுரத்திலிருந்து 15 கிலோமீட்டரும் தூரம் கொண்ட பரந்தூரில் புதிய இரண்டாவது விமான நிலையம் அமைய ஏற்பாடுகள் நடந்தது.பரந்தூர் மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள சில கிராமங்களிலிருந்தும், நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுவதால் பாதிக்கப்படுவோம் என்று கூறிய 13 கிராமங்களின் சார்பாக ஒரு குழு ஏற்படுத்தப்பட்டு அக்குழுவினரால் போராட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் போராட்டக் குழுவினர் அமைச்சர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த போராட்டக் குழுவினர் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சென்னைக்கு இரண்டாவது விமானம் நிலையம் தேவை. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் இவர்கள் அதை நடைமுறைப்படுத்தும் விதம்தான் மிகத் தவறு. மத்திய அரசிடம் சென்று இந்த இடங்களை தேர்ந்தெடுத்து இருக்கிறோம் எனக் கூறுகிறார்கள். அதற்கு மத்திய அரசு பணம் தருகிறது. மிக சந்தோசம்.
ஆனால் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது அதிமுக எந்த விஷயத்தையும் ஜனநாயக முறைப்படி செய்யவில்லை என்று குற்றம் சுமத்தினார்கள். பரந்தூரைப் பொறுத்தவரை திமுகவின் ஃபெயிலியர் மக்களிடம் கேட்காமலே இவர்களாகவே முடிவு எடுத்தது தான் இதில் பிரச்சனை. பாஜகவின் நிலைப்பாடு சென்னையில் இரண்டாவது விமான நிலையம் வேண்டும். அது எங்கே வேண்டும் என்பதை மக்களிடம் கேட்டு மாநில அரசு முடிவெடுங்கள்” எனக் கூறியுள்ளார்.