Skip to main content

தேனி மாவட்ட அரசியலில் திமுக வீக்... உச்சகட்ட கோஷ்டி பூசலில் நிர்வாகிகள்... அதிருப்தியில் திமுக தலைமை!

Published on 02/03/2020 | Edited on 02/03/2020

தி.மு.க.வுக்கு ரொம்ப வீக்கான மாவட்டம் என்றால் தேனி மாவட்டம்தான் என்பது அரசியல் வட்டாரத்தில் ரொம்ப பாப்புலர். இத்தனைக்கும் கட்சி அமைப்புகள் பலமாக இருக்கிற மாவட்டம்தான். ஆனால், கோஷ்டிப் பூசல்கள்தான் காலங்காலமாக தி.மு.க.வை பாதிக்கும் விஷயமாக தொடர்கிறது.

தேனி மாவட்டத்துக்கு இதுவரை உருப்படியான ஒரு மாவட்டப் பொறுப்பாளரை நியமிக்க முடியாத அளவுக்கு தலைமையே திண்டாடுகிறது. இப்போதைய மாவட்டப் பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணனுக்கு எதிராக, எல்.மூக்கையா, கம்பம் செல்வேந்திரன், ஜெயக்குமார், போடி லெட்சுமணன், சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்த தங்க தமிழ்செல்வன் என்று பலரும் தனித்தனி கோஷ்டிகளாக செயல்படுகிறார்கள். ஒரு ஆண்டுக்கு முன், தேனி ஒன்றியச் செயலாளர் ரத்தினசபாபதி, சின்னமனூர் ஒன்றிய செயலாளர் முருகேசன், உத்தமபாளையம் ஒன்றிய செயலாளர் குமரன், பெரியகுளம் நகரச்செயலாளர் அபுதாகிர், கம்பம் நகரச் செயலாளர் சிங் செல்லப்பாண்டி ஆகியோரின் பதவிகளை தி.மு.க. தலைமை பறித்தது. இவர்கள் அனைவரும் முன்னாள் மாவட்டப் பொறுப்பாளர் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள்.

 

dmk



அவர்களுக்குப் பதிலாக சக்கரவர்த்தி, அண்ணாதுரை, முருகேசன், முரளி, நெப்போலியன் ஆகியோரை புதிய பொறுப்பாளர்களாக நியமித்தது. இதையடுத்து பதவி பறிக்கப்பட்டவர்கள் தலைமையிடம் சென்று நேரில் முறையிட்டார்கள். அதைத் தொடர்ந்து, புதிய பொறுப்பாளர்கள் நீக்கப்பட்டு, பொறுப்புக்குழுக்களை தலைமை அறிவித்தது. இந்த பொறுப்புக்குழுத் தலைவர்களாக ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டார்கள்.


நியமிக்கப்பட்டு ஒருவாரமே ஆன நிலையில், பொறுப்புக்குழுவில் யாருக்கு பவர் என்ற புதிய ஃபைட் தொடங்கியிருக்கிறது. பொறுப்புக்குழு தலைவருக்கு பதவியில்லை என்று ஒரு பிரிவினரும், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் தலைவரின் கீழ்தான் செயல்பட வேண்டும் என்று மற்றொரு பிரிவினரும் கூறிவருகிறார்கள். உண்மையில் பொறுப்புக்குழு தலைவருக்கே பவர் அதிகம் என்கிறார்கள் சீனியர்கள்.
 

 

dmk



கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தேனி ஒன்றியத்தைத் தவிர மற்ற ஏழு ஒன்றியங்களையும் அ.தி.மு.க.விடம் பறிகொடுத்த நிலையில் இன்னமும் ஒன்றுபட்டு செயல்படும் அளவுக்கு சரியான தலைமை தேனி மாவட்ட தி.மு.க.வுக்கு கிடைக்கவில்லை. மாவட்டத்தில் ஆறு கோஷ்டிகள் என்றால், அந்தந்த ஒன்றியங்களில் அதைக்காட்டிலும் அதிகமான கோஷ்டிகள் உருவாகி வருகின்றன. கட்சி வளருகிறதோ இல்லையோ, கோஷ்டிகளின் வளர்ச்சிக்கு குறைச்சலில்லை என்று பொருமுகிறார்கள் உடன்பிறப்புகள்.


 

சார்ந்த செய்திகள்