
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது, ‘திருச்சியில் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து திருச்சியில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க ரூ. 290 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. அதோடு இந்த நூலகம் அமைப்பதற்கான நிர்வாக அனுமதியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியிருந்தார்.
இந்த நூலகம் 4.57 ஏக்கர் பரப்பளவில் தரை மற்றும் 7 தளங்கள் கொண்ட கட்டடமாக அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல்லை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாட்டியிருந்தார். இத்தகைய சூழலில் தான் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (01.04.2025) கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க. அன்பழகன் நூலகங்கள் பற்றிப் பேசினார். அதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளித்து பேசுகையில், “கோவையில் தந்தை பெரியார், சென்னையில் பேரறிஞர் அண்ணா, மதுரையில் கலைஞர் ஆகியோர்களின் பெயர்களைத் தாங்கி நூலகங்கள் நிறுவப்பட்டுள்ளதோ, அதனைத் தொடர்ந்து, திருச்சியில் அமையவிருக்கும் நூலகத்திற்குப் பெருந்தலைவர் காமராசரின் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என நான் கருதுகிறேன்.
எனவே, தமிழ்நாட்டில் கிராமங்கள்தோறும் பள்ளிகளைத் தொடங்கி, மதிய உணவு அளித்து, இலட்சக்கணக்கான குடும்பங்களின் கல்விக் கண்களைத் திறந்து, தமிழ்நாட்டின் கல்விப் புரட்சிக்கும், எதிர்கால வளர்ச்சிக்கும் வித்திட்ட பெருந்தலைவர் காமராசரின் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதி, திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராசரின் பெயர் சூட்டுவதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட வேண்டுமென்று முதலமைச்சர் என்ற முறையில் நான் (மு.க. ஸ்டாலின்) கேட்டுக் கொள்கிறேன்”எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த அறிவிப்புக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் சமுக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருச்சியில் அமையவுள்ள நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராஜரின் பெயர் சூட்டுவதாக இன்று (01.04.2025) தமிழ்நாடு சட்டப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அவருக்கு எனது மிகுந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கல்வியறிவு பெற வேண்டுமென தன்வாழ்நாள் முழுவதும் உழைத்தவர். கல்விக்கண் திறந்த காமராஜர் அவர்களின் பெயரை நூலகத்திற்கு வைப்பது மிகவும் பொருத்தமானது. முதல்வர் மு.க. ஸ்டாலின், பெருந்தலைவர் காமராஜர் மீது வைத்திருக்கும் அளப்பரிய அன்பையும், மரியாதையையும் காட்டுகிறது. இந்த அறிப்பை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனதார வரவேற்கிறேன். பாராட்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.