
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள கல்லாலங்குடி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. சுமார் 500 காளைகள் பங்கேற்ற இந்த நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று காளைகளை அடக்கினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தது.
இதில் வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்ட கீழாத்தூர் தேவா என்பவரின் காளை வேகமாக வெளியேறி ஓடி அந்தப் பகுதியில் உள்ள ஒரு கிணற்றுக்குள் தவறி விழுந்தது. தகவலறிந்து விரைந்து வந்த ஆலங்குடி தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி காளையை மேலே தூக்கி வந்து பார்த்த போது காளை ஏற்கனவே இறந்தது தெரிந்தது. இதேபோல மேக்குடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏர்போர்ட் சிவா என்பவரின் காளை வாடிவாசலில் இருந்து வெளியேறிய போது காளையை பிடிக்க வீசப்பட்ட கயிறு கழுத்தில் இறுக்கிய நிலையில் ஒரு மரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. கல்லாலங்குடி ஜல்லிக்ட்டில் அடுத்தடுத்து 2 காளைகள் உயிரிழந்த சம்பவத்தால் காளைகளின் உரிமையாளர்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் மிகுந்த சோகத்திற்கு உள்ளாகினர்.