Skip to main content

" சி.பி.ஐ.யை கேள்விக்கேட்க முடியாதவர்கள் நடிகர் விஜயை கேள்வி கேட்கிறார்கள் ' - கே.எஸ். அழகிரி அட்டாக்.

Published on 23/09/2019 | Edited on 23/09/2019

கோவை காளப்பட்டியில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கும் திருமண மண்டபத்தை தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி நேரில் பார்வையிட்டார். 

 

azhagiri about admk view of actor vijay speech

 

 

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி,  "வருகிற 30- ந்தேதி , காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கோவையில் நடைபெறுகின்றது. ஜவஹர்லால் நேருவால் தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பதாகவும், போரை  நேரு தொடர்ந்திருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருந்திருக்காது எனவும் அமித்ஷா பேசி இருக்கிறார். அமித்ஷாவும் மத்திய நிதி அமைச்சரும் வரலாறு தெரியாமல் பேசுகின்றனர்.    முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் இப்படி தவறாகப் பேச கூடாது. இவர்கள் தெரிந்து சொல்கிறார்களா? இல்லை, தெரியாமல் சொல்கிறார்களா ? என தெரியவில்லை. காஷ்மீர் சரித்திரத்தை அமித்ஷா மாற்றி எழுத முயற்சிக்கிறார். சர்வாதிகாரிகள் வரலாற்றை மாற்றத்ததான் முனைவார்கள். நேருவால்தான் காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்தது. ஜின்னாவின் வேண்டுகோளை ஏற்காமல் நேருவின் வேண்டுகோளை ஏற்று காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைந்து கொண்டனர். போர் நடந்த போது என்ன நடந்தது என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணங்கள் அனைத்தும் அரசிடம் இருந்தும் கூட அதை பார்க்காமல் உண்மைக்குப் புறம்பாக எதை வேண்டுமானாலும் திரித்து பேசலாம் என பா.ஜ.க நிர்வாகிகள் பேசுகின்றனர். தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் இதை கண்டிக்கிறேன் " என்றார் அழகிரி. 

தொடர்ந்து பேசிய அவர், "நாங்குநேரி இடைதேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வெற்றி பெறும். அந்த தொகுதியில் குஷ்பு போட்டியிடுவதாக வெளியான தகவல் உண்மையில்லை" என்றார். அதிமுகவை சீண்டினால் பெரிய ஆளாகிவிடலாம் என நடிகர்கள் சீண்டுவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது குறித்து விமர்சித்த அழகிரி,  " அதிமுக கட்சியினர் கேட்பாரற்று கிடக்கின்றனர். அவர்களை சீண்டினால் துர்நாற்றம் தான் வரும். அதிமுகவிடம் ஆட்சி இருந்தாலும் , அவர்கள் தரத்துடன் இல்லை.  எந்த மாநிலத்திலும் அரசியல் கட்சிகள் மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்தது கிடையாது. ஆனால் அதிமுக மாநில உரிமைகளை பா.ஜ.க விடம் விட்டுக்கொடுத்து வருகிறது. 

நீட் தீர்மானம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது தொடர்பாக அவர்கள் வெளியில் தெரிவிக்க வில்லை. தலைமை செயலகத்தில் சி.பி.ஐ வந்த போது வாய் மூடி மவுனமாக இருந்தார்கள்.  மேற்கு வங்கத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் சென்ற போது அவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். 

மாநில உரிமைகளை பாதுகாக்க முடியாதவர்கள் விஜய்க்கு பதில் சொல்வதை விட்டுவிட்டு, அப்போது சி.பி.ஐ க்கு பதில் சொல்லி இருக்க வேண்டும் " என ஆட்சியாளர்களை வார்த்தைகளால் தாக்கினார் அழகிரி.

 

 

சார்ந்த செய்திகள்