
தனது பலத்தை நிரூபிக்கவும் அதிமுகவின் முப்பெரும் விழாவினைக் கொண்டாடவும் திருச்சியில் மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்தார் ஓபிஎஸ். திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நடந்த இந்த மாநாட்டில் பல்லாயிரக்கணக்கில் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய மனோஜ் பாண்டியன் மற்றும் கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் 9 தீர்மானங்களை வாசித்தனர்.
வாசித்த தீர்மானங்களாவன: ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓபிஎஸ் பதவிக்காலம் 2026ல் முடிவடைகிறது. அதுவரை அவரை கட்சியில் இருந்து நீக்கவோ மாற்றவோ அவரது பணியை தற்காலிகமாக நிறுத்திவைக்கவோ எங்களைத் தவிர யாருக்கும் உரிமை இல்லை. போலி பொதுக்குழுவின் மூலம் ஓபிஎஸ் நீக்கப்பட்டார். அந்த மாநாட்டை நிராகரிக்கிறோம்.
தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓபிஎஸ்ஸை நீக்கிய போலி பொதுக்குழுவை கண்டிப்பதுடன் விதிமுறைகளுக்கு முரணாக செயல்படும் பொதுக்குழு கலைக்கப்பட வேண்டும்.
உண்மையான தொண்டர்களை கண்டறிந்து அவர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகளை வழங்கி அவர்கள் மூலம் நேர்மையான தேர்தல் நடத்தி பொதுக்குழு அமைக்க வேண்டும்.
நிரந்தரப் பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை நீடிக்கச் செய்ய வேண்டும்.
போலி பொதுக்குழுவால் எடப்பாடி பழனிசாமி மற்றும் சிலர் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் உடனடியாக பொறுப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தானே தனது பதவியில் இருந்து விலகிவிட்டதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஏற்கனவே அறிவித்துவிட்டார். ஆகவே, ஒருங்கிணைப்பாளர் 2026 வரை முழு பொறுப்புகளையும் மேற்கொண்டுள்ளார். அதன் அடிப்படையில் இடைக்காலத்தில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு பதில் ஓ.பன்னீர்செல்வத்தால் நியமிக்கப்பட்ட இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர் கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோரை நியமித்து பொறுப்புகளை கொடுத்தது ஓபிஎஸ். இதற்கு அடிப்படை தொண்டர்கள் அங்கீகாரம் தரவேண்டும்.
எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்டு ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட ஜாதி, மதம், மொழி, இனம் என வேறுபாடுகள் அற்று அனைத்து மக்களுக்கும் பொதுவான இயக்கமாக அதிமுக பீடுநடை போடும் என்பதை மாநாடு வலியுறுத்துகிறது.
அனைவருக்கும் பொதுவான இயக்கம் என்றும் ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி அனைவரும் சமவாய்ப்புகளை பெற பாடுபட வேண்டும் என்று நம்மை நாமே அர்ப்பணித்து கொள்வோம்.
தமிழ்நாட்டில் வறுமை, வேலையின்மை போன்ற துன்பங்களில் இருந்து அனைவரும் நீக்கப்பட்டு அனைவரும் கண்ணியத்துடன் வாழ வழிவகை காணும் வகையில் வறுமை ஒழிப்பு, வேலையில்லா திண்டாட்டத்தை போக்குதல், விலைவாசியை குறைத்தல், ஏழை மக்களின் வாழ்க்கை சுமையை இலவசத் திட்டங்களின் மூலம் நீக்குதல் போன்ற நலத்திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்வதை இந்த மாநாடு அங்கீகரிக்கிறது.