Skip to main content

தொடரும் உட்கட்சி மோதல்; கைகலப்பில் முடிந்த காங்கிரஸ் கூட்டம்

Published on 19/05/2023 | Edited on 19/05/2023

 

rajasthan congress party meeting ajmer ashok gehlot versus sachin pilot incident 

 

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதல்வராக அசோக் கெலாட் பதவியேற்றதில் இருந்தே அசோக் கெலாட்டுக்கும் முன்னாள் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே உட்கட்சி மற்றும் ஆட்சி தொடர்பாக மோதல் தொடர்ந்து வருகிறது.

 

அசோக் கெலாட் தலைமையிலான அரசுக்கு எதிராக கடந்த 2020 ஆண்டு ஜூலை மாதம் அப்போது துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் மற்றும் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 18 பேர் போர்க்கொடி தூக்கினர். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி மேலிடத்தின் தலையீட்டையடுத்து துணை முதல்வர் மற்றும் அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிகளில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார். இருப்பினும், வசுந்தரா ராஜே தலைமையிலான முந்தைய பாஜக அரசின் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சச்சின் பைலட் வலியுறுத்தி வருகிறார். இதனால் சச்சின் பைலட் மற்றும் அசோக் கெலாட் ஆகிய இருவருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது.

 

மேலும், வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக ஆட்சியின் போது நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஆளும் காங்கிரஸ் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக சச்சின் பைலட் அறிவித்தார். ஆனால், இதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை கடும் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இருப்பினும், கட்சித் தலைமையின் எதிர்ப்பையும் மீறி சச்சின் பைலட் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஜெய்ப்பூர் நகரில் கடந்த மாதம் 11 ஆம் தேதி நடத்தினார். அதனைத் தொடர்ந்து ஜன் சங்கர்ஷ் யாத்ரா என்ற பெயரில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த ஊழல் மற்றும் தேர்வுத்தாள் முன்கூட்டியே கசிந்த விவகாரம் ஆகியவற்றுக்கு எதிராக அஜ்மீரில் இருந்து ஜெய்ப்பூருக்கு கடந்த 11 ஆம் தேதி தொடங்கி 5 நாள் நடைப்பயணம் மேற்கொண்டார். இந்த நடைப்பயணத்தின் கடைசி நாளான கடந்த 15 ஆம் தேதி நிறைவு செய்தார்.

 

rajasthan congress party meeting ajmer ashok gehlot versus sachin pilot incident 

 

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சச்சின் பைலட் பேசுகையில், "ஊழலுக்கு எதிராக மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் 6 மாதங்கள் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்க அவகாசம் உள்ளது. நான் யார் மீதும் குற்றச்சாட்டுகளைச் சுமத்தவில்லை.  தனிப்பட்ட முறையில் யாருடனும் எனக்கு எந்த கருத்து மோதலும் இல்லை. எனது கோரிக்கைகள் இம்மாத இறுதிக்குள் ஏற்கப்படாவிட்டால், மாநில அளவிலான மாபெரும் போராட்டம் நடத்தப்படும். நான் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எனது கடைசி மூச்சு வரை ராஜஸ்தான் மக்களுக்காக தொடர்ந்து சேவை செய்வேன் என உறுதி அளிக்கிறேன். யாரும் என்னை அச்சுறுத்த முடியாது. எனது இந்த போராட்டம் யாருக்கும் எதிரானது அல்ல. இந்த போராட்டமானது ஊழலுக்கு எதிராகவும் இளைஞர்களின் நலனுக்காகவும் நடத்தப்படுகிறது" என தெரிவித்தார்.

 

rajasthan congress party meeting ajmer ashok gehlot versus sachin pilot incident 

 

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் நேற்று (18.05.2023) நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆதரவாளர்கள் மற்றும் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே முதலில் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். மேலும் தங்கள் தரப்பு தலைவர்களுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டதை கண்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். கட்சி கூட்டத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் ராஜாஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்