Skip to main content

“இந்தியாவில் கருப்பாகவும்...” - சாம் பிட்ரோடாவை அடுத்து காங்கிரஸ் தலைவரின் பேச்சால் மீண்டும் சர்ச்சை!

Published on 10/05/2024 | Edited on 10/05/2024
Controversy again with Congress leader's adhir ranjan chowdhury speech after Sam Pitroda
                                                 சாம் பிட்ரோடா

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதில், ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்டமாகவும், ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும், மே 7ஆம் தேதி மூன்றாம் கட்டமாகவும் தேர்தல் நடந்து முடிந்தது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்தத் தேர்தல், ஜூன் 4ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டத் தேர்தல்களை எதிர்கொண்டு பல மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம், கர்கோன் மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, “பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு எதிராக ஜிகாத் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர். மேலும், இங்கு காங்கிரஸில் உள்ளவர்களும், மோடிக்கு எதிராக ஜிகாத் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். அதாவது குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் மோடிக்கு எதிராக ஒன்றுபட்டு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வாக்கு ஜிகாத் என்ற கருத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? இது ஜனநாயகத்தில் வேலை செய்ய முடியுமா? இந்திய அரசியல் சட்டம் இதை அனுமதிக்கிறதா? நான் காங்கிரஸ் இளவரசரிடம் கேட்கிறேன். பாகிஸ்தான் மீது ஏன் இவ்வளவு அன்பும், நமது ராணுவத்தின் மீது இவ்வளவு வெறுப்பும் ஏன்? பாகிஸ்தானின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துவதன் மூலம் தங்கள் வாக்கு வங்கியைப் பலப்படுத்திக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை திரும்பக் கொண்டு வரவோ, அயோத்தியில் ராமர் கோவிலுக்கு ‘பாபர் பூட்டு’ போடவோ, தேசத்தின் காலி நிலங்களையும் தீவுகளையும் பிற நாடுகளுக்குப் பரிசாகக் கொடுக்கவோ காங்கிரஸ் கட்சிக்கு 400 இடங்கள் தேவை. இந்தியா வரலாற்றில் ஒரு திருப்புமுனையில் உள்ளது. வாக்கு ஜிகாத் பலிக்குமா? அல்லது ராம ராஜ்ஜியமா? என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்” என்று சர்ச்சையாக பேசினார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், வெளிநாடு வாழ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடாவின் கருத்து நாடு முழுவதும் சர்ச்சையைக் கிளப்பியது.

காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவின் தலைவராக பொறுப்பு வகித்து வரும் சாம் பிட்ரோடா, பிரதமர் மோடி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் ஊடகம் ஒன்றிற்கு காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா காணொளி வாயிலாக பேட்டி அளித்தார். அதில் பேசிய அவர், “இந்தியாவைப் போன்ற பல்வேறு தரப்பினர் வாழும் தேசத்தை நாம் சிறப்பாக வைத்திருக்க முடியும். இந்தியாவின் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்கள் போலவும், தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் தோற்றம் அளிக்கிறார்கள். ஆனால், இதெல்லாம் ஒரு பொருட்டல்ல. நாங்கள் அனைவரும் சகோதர சகோதரிகள்” என்று தெரிவித்தார். சாம் பிட்ரோடாவின் இந்தக் கருத்து, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர்களை நிற வேற்றுமையுடன் வெளிநாட்டு மக்களுடன் ஒப்பிட்டு பிட்ரோடாவின் கருத்து சர்ச்சையான பின் காங்கிரஸ் தலைவர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனையடுத்து, காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளர் பதவியை சாம் பிட்ரோடா ராஜினாமா செய்தார்.

Controversy again with Congress leader's adhir ranjan chowdhury speech after Sam Pitroda

இந்த நிலையில், இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி பேசிய கருத்துக்கள் தற்போது மேலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே பிரதமர் நரேந்திர மோடி தனது வெற்றியை அறிவித்த விதம் தற்போது மாறி, இப்போது அவர் கலக்கமடைந்துள்ளார். எதிர்பார்த்தபடி முடிவு வராது என்று நினைக்கிறார். அதனால் மக்களைத் தவறாக வழிநடத்த வேறு வழிகளை எடுத்து வருகிறார். யாருடைய தனிப்பட்ட கருத்தையும் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. நமது நிலப்பரப்பு நமது மக்களின் பல்வேறு வகையான தோற்றங்களுக்கு வழிவகுக்கிறது. நம் நாட்டில் புரோட்டோ ஆஸ்ட்ராலாய்ட் (கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள்), மங்கோலாய்டு (கிழக்காசிய பகுதியைச் சேர்ந்தவர்கள்), நீக்ரிட்டோக்கள் (கருப்பு நபர்கள்), சிலர் கருப்பாகவும், சிலர் வெள்ளையராகவும் உள்ளனர்” என்று கூறினார். சாம் பிட்ரோடாவைத் தொடர்ந்து ஆதிர் ரஞ்சன் செளத்ரி கருத்து மீண்டும் சர்ச்சையாகியுள்ளது. இதற்கு பா.ஜ.க.வினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்