இந்தியாவில் தமிழ்நாடு, டெல்லி, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மஹாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.
இந்தநிலையில், இன்று (23/04/2021) பிரதமர் நரேந்திர மோடி, கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் மாநிலங்கள் தங்களது தேவைகளை எடுத்துரைத்தன. இதனைத் தொடர்ந்து, ஆலோசனையில் பிரதமர் மோடி பேசியது குறித்து பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அரசு மாநிலங்களுக்கு முழு ஆதரவையும் வழங்கும் என பிரதமர் உறுதியளித்தார். மத்திய சுகாதாரத்துறை, மாநிலங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், அவ்வப்போது மாநிலங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஆக்ஸிஜன் விநியோகத்தைப் பொறுத்தவரை, மாநிலங்கள் எழுப்பிய விவகாரங்களை பிரதமர் மோடி கவனத்தில் எடுத்துக்கொண்டார். ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்க தொடர்ச்சியான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். அரசாங்கத்தின் அனைத்து சம்பந்தப்பட்ட துறைகளும், அமைச்சகங்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. தொழிற்சாலைக்கான ஆக்ஸிஜனும், உடனடி தேவைகளுக்காக திருப்பி விடப்பட்டுள்ளது என பிரதமர் தெரிவித்தார்.
மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் தொடர்பான தேவைகளை பூர்த்தி செய்ய அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகள் பதுக்கப்படுவது மற்றும் கருப்பு சந்தையில் விற்கப்படுவது குறித்து கண்காணிக்குமாறு மாநில அரசுகளை அவர் கேட்டுக்கொண்டார். ஆக்ஸிஜன் டேங்கர்கள், அது எந்த மாநிலத்திற்குமானதாக இருந்தாலும் சரி, அவை நிறுத்தப்படாமல் இருப்பதையும், சிக்கிக்கொள்ளாமல் இருப்பதையும் அனைத்து மாநிலங்களையும் உறுதிசெய்ய வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்ல, உயர்மட்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்குமாறு மாநிலங்களை அவர் அறிவுறுத்தினார்.