ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கயாகல்ப் திட்டத்தின் கீழ் 20 அரசுக் கல்லூரிகளின் கட்டிடங்கள் மற்றும் நுழைவு வாயில் பகுதிகள் ஆகியவற்றில் ஆரஞ்ச் நிறம் பூசுமாறு ராஜஸ்தான் கல்லூரி கல்வி ஆணையரகம் உத்தரவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வெளியான உத்தரவில், ‘கல்லூரியில் நுழைந்தவுடன் மாணவர்கள் நேர்மறையாக உணரும் வகையில் கல்லூரியின் கல்விச் சூழல் மற்றும் சூழ்நிலை இருக்க வேண்டும். உயர்கல்வி பற்றிய நல்ல செய்தியை சமுதாயத்திற்கு அனுப்ப வேண்டும். எனவே கல்லூரிகளில் நேர்மறையான, தூய்மையான, ஆரோக்கியமான மற்றும் கல்விச் சூழலை உருவாக்க கல்லூரிகள் புத்துயிர் பெற வேண்டும்.
அதனால், அரசு கல்லூரிகளின் கட்டிடங்கள் மற்றும் நுழைவுவாயிலில் ஆரஞ்சு நிற பூச வேண்டும். முதற்கட்டமாக, ஒவ்வொரு பிரிவிலும் 2 அரசு கல்லூரிகள் என 10 மண்டலங்களில் 20 கல்லூரிகளின் கட்டிடங்கள் முகப்பு மற்றும் நுழைவு வாயிலில் ஆரஞ்ச் நிற பூச வேண்டும். அதனை புகைப்படமாக எடுத்து கல்வித்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகளுக்கு ஆரஞ்ச் நிறம் பூசுவதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கல்வித்துறையை காவிமயமாக்க பா.ஜ.க அரசு செய்யும் முயற்சி என காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க அரசை விமர்சனம் செய்துள்ளது.