Skip to main content

அனல் மின் திட்டத்தை ஒடிசாவில் அமைக்க என்எல்சி இந்தியா ஒப்பந்தம்

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
NLC India signs deal to set up thermal power project in Odisha
கோப்புப்படம்

என்எல்சி இந்தியா நிறுவனம் 2400 மெகாவாட் திறனுடைய (3x800 மெகாவாட் - முதல் நிலை) நிலக்கரி அடிப்படையிலான அனல்மின் நிலையத்தினை அமைப்பதற்கான ஒப்பந்தத்தினை, பாரத் மிகுமின் நிறுவனத்திற்கு உலகளாவிய போட்டி வழித்தடத்தின் கீழ் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, ஒடிசா மாநிலத்தில் ஜார்சுகுடா மாவட்டத்தில், க்ரீன் ஃபீல்டு அல்ட்ரா சூப்பர் கிரிட்டிகல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைப்பதற்கு வழங்கியுள்ளது.

இபிசி ஒப்பந்த நோக்கத்தில் 3x800 மெகாவாட் திறனுடைய முதல் நிலைக்கான கொதிகலன்கள், டர்பைன், ஜெனரேட்டர்கள் மற்றும் ஆலைகளின் இதர உப இயந்திரங்கள், கந்தக மற்றும் நைட்ரஜன் வாயுக்களைப் பிரித்தெடுப்பதற்கான எப்ஜிடி (FGD) மற்றும் எஸ்சிஆர் (SCR) போன்ற உபகரணங்களை பொறியியல், உற்பத்தி, வழங்கல் மற்றும் நிறுவுதல் ஆகியவை அடங்கும்.

உற்பத்தி செய்யப்படும் 2400 மெகாவாட் மின்சாரத்தை தமிழ்நாடு, ஒடிசா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படுவதற்கான மின் கொள்முதல் ஒப்பந்தம் (PPA) ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அனல் மின் திட்டத்திற்கான நிலக்கரி இணைப்பு, ஒடிசாவின் ஜார்சுகுடா மற்றும் சம்பல்பூர் மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள என்எல்சிஐஎல்-இன், ஆண்டுக்கு 20 மில்லியன் டன் (MTPA) உற்பத்தி திறனுடைய தலபிரா II & III திறந்த வெளி சுரங்கங்களில் (OCP) இருந்து கிடைக்கும்.

இந்த அனல் மின் திட்டத்திற்குத் தேவையான நீர் ஹிராகுட் நீர்த்தேக்கத்திலிருந்து கிடைக்கும் வகையில் இணைக்கப்பட்டுள்ளது. உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மாநிலங்களுக்கு இடையிலான மின் கடத்தி (ISTS) மற்றும் மாநிலத்திற்குள்ளான மின் பகிர்மான (STU) மின் தடங்களின் வாயிலாக வெளியேற்றப்படும்.

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக வழிகாட்டுதல்களைப் பூர்த்தி செய்வதற்காக கந்தக மற்றும் நைட்ரஜன் வாயுக்களைப் பிரித்தெடுப்பதற்கான எப்ஜிடி (FGD) மற்றும் எஸ்சிஆர் (SCR) போன்ற சமீபத்திய மாசுக் கட்டுப்பாட்டு உபகரணங்களுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். உயிரி கழிவு (பயோ மாஸ்) எரிபொருள் கையாளும் அமைப்புகளுடன், மத்திய மின் அமைச்சக (MoP) வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப, பசுமை முயற்சியின் ஒரு பகுதியாக உயிரி கழிவினை நிலக்கரியோடு இணைத்து எரிப்பதற்கு ஏற்றவாறு கொதிகலன்கள் வடிவமைக்கப்படும்.

திட்டத்தின் முதல் அலகு, 2028-29 நிதியாண்டில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. நிலக்கரிச் சுரங்கத்தின் அருகிலேயே அமைக்கப்படவுள்ள அனல் மின் நிலையம் என்பதால், மாறுபடும் செலவு (variable cost) சிக்கனத்தில், மற்ற மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்த மின் நிலையம் போட்டியாக இருக்கும் என்பதோடு, என்எல்சி இந்தியா, அதன் பயனாளிகளுக்குக் குறைந்த விலை மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கும் என என்எல்சி மக்கள் தொடர்புத் துறை செயல் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க. கூட்டணி முயற்சி தோல்வி; வெளியான பரபரப்பு தகவல்!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
BJP Coalition efforts fail Exciting information released
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக  அறிவிக்கப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே சமயம் ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மக்களவைத் தேர்தலுடன் ஒடிசாவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. பிஜு ஜனதாதளம் கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி அமைப்பது தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தையை மேற்கொண்டிருந்தது. 

இந்நிலையில் ஓடிசாவில் ஆளுங்கட்சியான பிஜூ ஜனதாதளம் உடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிப் பங்கீட்டில் பா.ஜ.க. - பிஜு ஜனதா தளம் இடையே உடன்பாடு எட்டப்படாததால் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. பா.ஜ.க.வின் நிபந்தனைகளை பிஜு ஜனதா தளம் ஏற்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து ஒடிசாவில் மொத்தம் உள்ள 21 மக்களவைத் தொகுதியிலும் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது.

BJP Coalition efforts fail Exciting information released
பா.ஜ.க. எம்.பி. அப்ரஜிதா சாரங்கி

இது குறித்து ஒடிசா மாநில பா.ஜ.க. தலைவர் மன்மோகன் சமலின் எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “நாடாளுமன்ற மக்களவை தேர்தலிலும், மாநில சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஒடிசாவில் பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது என்பது தெளிவாகியுள்ளது. அதே சமயம் இது குறித்து பா.ஜ.க. எம்.பி. அப்ரஜிதா சாரங்கி கூறுகையில், “அனைத்து தொகுதிகளிலும் எங்கள் (பா.ஜ.க.) வேட்பாளர்களை நிறுத்துவோம். 21 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 147 மாநில சட்டசபை தொகுதிகளில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம். பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் மிகுந்த ஆற்றலும், மிகுந்த உற்சாகமும், தேர்தல் பணியின் மீது மிகுந்த ஆர்வமும் உள்ளது, எது நடந்ததோ அது நடக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்த சரியான முடிவை எடுத்த அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஒடிசாவில் மொத்தம் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஆளும் கட்சியான பிஜு ஜனதாதளம் 12 மக்களவைத் தொகுதிகளையும், பா.ஜ.க. 8 தொகுதிகளையும் கைப்பற்றி இருந்தன. மேலும் பிஜூ ஜனதா தளத்துடன் பா.ஜ.க. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவே ஒடிசாவில் மக்களவைத் தேர்தலை கடைசி 4 கட்டங்களாக நடத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

ரூ. 2000 கோடிக்கு என்.எல்.சி. நிறுவனப் பங்குகளை விற்க மத்திய அரசு ஆலோசனை!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Central government advises to sell shares of NLC company for Rs.2000 crore

இந்திய அரசு நிறுவனமான என்.எல்.சி நிறுவனத்தினுடைய 7 சதவீத பங்குகள் விற்பனைக்கு வர இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது தற்போது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

2013 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் இருந்தபோது, மத்திய அரசு இதேபோல் என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளைத் தனியாருக்கு விற்பதாக அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு அன்றைய ஆளும் கட்சியான அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்தின. பிறகு தனியாருக்கு விற்கப்படுவதாக இருந்த 5 சதவீத என்.எல்.சி பங்குகளையும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு வாங்குவதாக முடிவெடுத்தது. 

இந்த நிலையில், தற்போது மீண்டும் என்.எல்.சியின் 7 சதவீத பங்குகள் விற்பனைக்கு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. 2013ல் என்.எல்.சியின் ஒரு பங்கின் விலை ரூ.75 ஆக இருந்தது. தற்போது ஒரு பங்கின் விலை ரூ. 200க்கும் மேல் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதன்படி, 7 சதவீதம் பங்குகள் என்பது ரூ. 2000 கோடிக்கும் மேலாக வரும் எனச் சொல்லப்படுகிறது. 

தமிழ்நாடு அரசின் நிதி நிலை சூழ்நிலையில், 2000 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்க இயலுமா என்ற கேள்வி எழுவதாகச் சொல்லப்படுகிறது. என்.எல்.சி. இந்தியா லிமிடெட் அரசு நிறுவனத்திற்காகத் தமிழ்நாட்டில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. தற்போது வரை நிலம் கையகப்படுத்தியவர்களுக்கு உரிய நிவாரணமும், பணியும் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதனைக் கண்டித்து பாஜகவை தவிர ஏனைய கட்சிகள் அனைத்தும் போராடும் நிலையில், மத்திய பாஜக அரசு தற்போது என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் மேலும் பிரச்சனையைத் தீவிரப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.