கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநிலம், தட்சின கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தப்ப கவுடா. இவரது மனைவி குசுமாவதி. இவர்களது மகள் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அவர், கடந்த 2012ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி, கல்லூரியில் இருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது, ஒரு நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பரிதாபமாக கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் பெற்றோர் காவல்துறையினருக்கு புகார் அளித்தனர்.
அவர் அளித்த அந்த புகாரின் பேரில், கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதன் பின், அந்த வழக்கை மாநில சி.ஐ.டி போலீசார் விசாரித்து வந்தனர். அதன் பின்னர், இந்த வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபர், இந்த வழக்கிலிருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தாய் குசுமாவதி டெல்லியில் உள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வீட்டு முன்பு நேற்று முன்தினம் (02-03-24) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, குசுமாவதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “சோனியா காந்திக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், அவருடைய உதவியாளர் என்னுடைய கோரிக்கைகளை கேட்டறிந்தார். இதையடுத்து, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடகா முதல்வரிடம் சோனியா காந்தி வலியுறுத்துவார் என்று அவர் என்னிடம் உறுதி அளித்தார். இந்த வழக்கில் நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பேன்” என்று கூறினார்.