பஞ்சாயத் ராஜ் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். ஒவ்வொரு உரையின் போதும் அந்தந்த ஊர் சார்ந்த கெட்அப்புகளில் வந்து அசத்தும் அவர், அன்றைய தினம் தங்க நிறத்திலான மாலை ஒன்றை கழுத்தில் அணிந்திருந்தார்.
இதனை தனபாட் ஐஐடியைச் சேர்ந்த இயந்திரவியல் மாணவர் ரபேஷ்குமார் சிங் கண்டு வியந்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு ட்விட்டர் வழியாக வாழ்த்து சொன்ன ரபேஷ், ‘பஞ்சாயத் ராஜ் தினத்தன்று தங்களது உரை சிறப்பாக இருந்தது. நான் அதைக் கேட்டுக்கொண்டு இருந்தேன். அந்த சமயத்தில் தாங்கள் கழுத்தில் அணிந்திருந்த தங்க நிறத்திலான மாலை என்னை மிகவும் கவர்ந்தது. எனக்கும் அதேபோல் ஒன்று கிடைக்குமா?’ என பதிவிட்டிருந்தார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரதமர், ரபேஷின் ட்வீட்டிற்கு மறுநாளே பதிலளித்துள்ளார். அவர் ரபேஷுக்கு அனுப்பிய கடிதத்தில், ‘நான் உங்களது ட்வீட்டைப் படித்தேன். அதில் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் நான் பேசும்போது அணிந்திருந்த மாலை உங்களுக்குப் பிடித்திருந்ததாக குறிப்பிட்டிருந்தீர்கள். இந்த கடிதத்தோடு மாலையும் அனுப்பியிருக்கிறேன். எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்’ என மோடி எழுதியிருந்தார்.
இது தன்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக ரபேஷ்குமார் தெரிவித்துள்ளார். சின்னச்சின்ன விஷயங்களில் எல்லாம் கவனம் செலுத்தும் மோடி, மிக முக்கியமான விஷயங்களில் பிஸியாகி விடுகிறார். அவருக்கு இங்கிருக்கும் அரசியல்வாதிகள் கடிதம் எழுதுவதற்கு பதிலாக, ட்விட்டரில் சொடுக்கியிருந்தால் எப்போதோ காவிரி வந்திருக்கும் என கிண்டலாக பதிவிட்டு, ஆதங்கத்தைத் தீர்த்துக் கொள்கின்றனர் நெட்டிசன்கள்.