நடந்து முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை வீழ்த்தி, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். விரைவில் அதிபராக பொறுப்பேற்கு டொனால்ட் டிரம்ப்க்கு, உலக தலைவர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில், டொனால்ட் டிரம்பின் சிலைக்கு கிராமத்தினர் அனைவரும் பாலாபிஷேகம் நடத்திய சம்பவம் தற்போது பேசுபொருளாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலம், ஜனகாம் மாவட்டத்தில் உள்ள கொன்னேவ கிராமத்தைச் சேர்ந்தவர் புஸ்ஸா கிருஷ்ணா. டொனால்ட் டிரம்பின் தீவிர ரசிகரான இவர், டிரம்ப் மீது அதிக அன்பு கொண்டுள்ளார். டிரம்ப் மீது வைத்திருந்த அன்பின் வெளிப்பாடாக, கடந்த 2019ஆம் ஆண்டு டிரம்ப் அமெரிக்கா அதிபராக இருந்த போது கிருஷ்ணா தனது வீட்டிலேயே அவருக்கு கோயில் கட்டி சிலை வைத்துள்ளார். மேலும், டிரம்பின் சிலைக்கு அவ்வப்போது வழிப்பட்டும் வந்துள்ளார். இந்த சூழலில், கடந்த 2020ஆம் ஆண்டு கிருஷ்ணா, உடல்நல குறைப்பாட்டால் உயிரிழந்தார்.
இந்த நிலையில் தான், அமெரிக்கா அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த வெற்றியை கொண்டாட முடிவு செய்த கிராம மக்கள் அனைவரும், கிருஷ்ணா வீட்டில் உள்ள டொனால்ட் டிரம்ப் சிலைக்கு நேற்று பாலாபிஷேகம் நடத்தினர். மேலும், அவரது சிலைக்கு மாலைகள் அணிவித்து டிரம்பிற்கு நீண்ட ஆயுள் வேண்டி வழிப்பட்டனர். அதிபராகும் டிரம்ப் சிலைக்கு, தெலுங்கானாவில் பாலாபிஷேகம் நடத்திய சம்பவம் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.