ஜம்மு காஷ்மீரில், கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, நடத்தப்பட்ட முதல் சட்டமன்றத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதன்படி, அக்கட்சியின் செயல் தலைவராக இருக்கக்கூடிய உமர் அப்துல்லா முதல்வராக பதவி வகித்து வருகிறார்.
இந்த சூழலில், 6 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் முதல் கூட்டத்தொடர் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில், தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏவுமான அப்துல் ரஹீம் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, சட்டசபை கூடியதும், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பான தீர்மானத்திற்கு குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அப்போதும், பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், அமளியில் ஈடுபட்டும் சபாநாயகருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால், சட்டசபைக்குள் குழப்பம் ஏற்பட்டது.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டசபையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு எம்.எல்.ஏக்களும், ஆளுநருக்கும் நன்றி தெரிவித்து பேசினார்கள். அந்த வகையில், தேசிய மாநாட்டு கட்சியின் எம்.எல்.ஏ கைசர் ஜாம்ஷெத் லோன் பேசினார். அவர் பேசும்போது, “நான் ஒரு பதின்ம வயதினராக இருந்தபோது, ஒரு இராணுவ அதிகாரியால் சித்திரவதை செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்டேன். இதனால், பயங்கரவாதியாகி விடலாம் என விரும்பினேன். ஆனால் ஒரு மூத்த அதிகாரி ஒருவரின் செயலால், எனக்கு நம்பிக்கை திரும்ப வந்தது.
நான் சிறுவனாக இருந்தபோது என் பகுதியில் ஒரு ஒடுக்குமுறை இருந்தது. நான் 10ம் வகுப்பு படிக்கும் மாணவனாக இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். நான் உட்பட 32 இளைஞர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டோம். அதில் பயங்கரவாத குழுவில் சேர்ந்த ஒரு இளைஞரைப் பற்றி ராணுவ அதிகாரி ஒருவர் என்னிடம் கேட்டார். அவர் எங்கள் பகுதியில் வசிப்பதால் எனக்கு அவரைத் தெரியும் என்று நான் சொன்னேன். அதற்காக நான் அடி வாங்கினேன். பின்னர், அவர் என்னிடம் பயங்கரவாத செயலில் அந்த இளைஞர் இருக்கிறாரா என்று கேட்டார். நான் இல்லை என்று பதிலளித்தேன், நான் மீண்டும் அடிவாங்கினேன்.
பின்னர் மூத்த அதிகாரி ஒருவர் வந்து என்னிடம் பேசினார். அவர் என்னிடம், ‘நீ வாழ்க்கையில் என்ன ஆக விரும்புகிறாய்?’ என்று கேட்டார். நான் ஒரு பயங்கரவாதியாக இருக்க விரும்புகிறேன் என்று சொன்னேன். அவர் என்னிடம் காரணத்தைக் கேட்டார். நான் அனுபவித்த சித்திரவதைகளைப் பற்றி அவரிடம் சொன்னேன். அதன் பின்னர், அந்த அதிகாரி, என்னை அடித்த அந்த ஜூனியர் அதிகாரியை கண்டித்து ராணுவத்தின் மீதான நம்பிக்கையை எனக்கு கொடுத்தார். விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 32 இளைஞர்களில் 27 பேர் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளனர் என்பதை பின்னர் அறிந்து கொண்டேன்” என்று கூறினார்.