குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் போலாரா. விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், சூரத் நகரில் கட்டுமான தொழில் நடத்தி வருகிறார். இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கார் ஒன்றை வாங்கி தனது சொந்த பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வந்திருக்கிறார். கார் வாங்கியதில் இருந்து சஞ்சய்க்கு ஏராளமான சொத்துக்கள் வரவே, அந்த காரை தனது ராசியான கார் என்று கருதியுள்ளார். மேலும் அந்த காரை, தனது குடும்பத்தில் இருக்கின்ற ஒரு உறுப்பினர் போல் பாவித்து வந்துள்ளார்.
இந்த சூழலில், கார் நீண்ட காலம் ஓடியதால் அவ்வப்போது பழுது ஏற்பட தொடங்கியுள்ளது. இதனால், இந்த காரை விற்றுவிடலாம் என்று பலபேர் அறிவுரை கூறியுள்ளனர். ஆனால், சஞ்சய் போலாரா, வேறு ஒரு காரை வாங்கி அதை பயன்படுத்தி வந்துள்ளார். வேறு ஒரு காரை பயன்படுத்தி வந்தாலும், தனது ராசியான காரை விற்க மனமில்லாமல் இருந்துள்ளார். காரின் ராசி எங்கும் போய்விடக்கூடாது என்று எண்ணிய சஞ்சய், அந்த காரை தனக்கு சொந்தமான நிலத்தில் அடக்கம் செய்துவிட வேண்டும் என்று வித்தியாசமான முடிவை எடுத்துள்ளார்.
அதன்படி, கார் அடக்கம் செய்வதற்கான தேதியை குறித்து தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து, நேற்று முன் தினம் காரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, அந்த காரை மலர் மாலைகளால் அலங்கரித்து, தனக்கு சொந்தமான நிலத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றுள்ளார். இதில், ஆன்மீக பிரமுகர்கள் உள்பட சுமார் 1,500 பேர் கலந்து கொண்டனர். அதன் பின்னர், அந்த இடத்தில் தோண்டப்பட்ட 15 அடி ஆழத்தில் காரை புதைத்தார். புதைத்த போது, மந்திரங்கள் ஓதப்பட்டு, மலர்கள் தூவப்பட்டது. இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டுள்ளது. காருக்கு இறுதிச் சடங்கு செய்யும் நிகழ்வுகள் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.