மத்தியப் பிரதேச மாநிலம் திருவாயிலு கிராமத்தைச் சேர்ந்தவர் 8 வயது சிறுமி. இவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த கிராமத்தில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 4 பேர், அந்த சிறுமியை காரில் கடத்தி சென்றனர். மேலும், காரை பாழடைந்த கட்டிடத்திற்கு அருகே நிறுத்தி அங்கு வைத்து சிறுமியை 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில், மூச்சுத்திணறிய சிறுமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சிறுமி வீட்டில் இல்லாததை கண்டு சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடி வந்துள்ளனர். அப்போது, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் தெரிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர், போலீசாரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜெயசிங்(30), முகேஷ்சிங்(28), மணீஷ் திர்கி(27) என தெரியவந்தது. தலைமறைவாக இருக்கும் நான்காவது குற்றவாளியான முனீம் சிங்கை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக 30 சாட்சிகள் விசாரிக்கப்பட்டதன் பேரின், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது நிரூபணம் ஆனதால், அவர்கள் மூன்று பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவர்கள் மூவரும் தலா ரூ.1.20 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.