கோவை மாவட்டத்தைத் தொடர்ந்து இன்று (09.11.2024) விருதுநகர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். இதற்கிடையே திமுக நிர்வாகிகளைச் சந்தித்து பல்வேறு பணிகள் குறித்து விவாதித்தார். அப்போது, திமுகவின் கட்சிப் பணிகள், தேர்தல் குறித்த விவரங்களை அவர்களிடம் கேட்டறிந்தார். விருதுநகர் மாவட்ட அரசியல் பற்றிய டேட்டாக்கள் அவரது கையில் இருந்தன. அந்த டேட்டாக்களை வைத்துக் கொண்டு கேள்விகளைக் கேட்டதால் நிர்வாகிகளில் பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது.
முதல்வர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறியுள்ளனர். இதனையடுத்து நிர்வாகிகளிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், “நாடாளுமன்றத் தேர்தல் போல சட்டமன்றத் தேர்தலிலும் 100% வெற்றியைப் பெற்று ஆட்சியமைப்போம். அதை நினைவில் வைத்துக் கொண்டு கடுமையாக உழைக்க வேண்டும். அலட்சியமாகவும் மெத்தனமாகவும் இருந்து விடக்கூடாது. அரசின் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும் ஏதோ ஒரு வகையில் பயன் பெற்றுள்ளது. இதனை மக்களுக்கு உணர்த்தும்படி நம் பிரச்சாரம் அமைய வேண்டும். முதலில், நமது அரசு எந்தெந்த திட்டங்களை நிறைவேற்றியுள்ளது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.
பிறகு மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். இளைஞர்கள் தான் எதிர்காலத்தின் விதைகள். அவர்களைக் கட்சியில் இணைக்க வேண்டும். அவர்களுக்கான முக்கியத்துவத்தைக் கட்சிப் பணிகளில் பகிர்ந்தளிக்க வேண்டும். விருப்பு வெறுப்புகளைக் காட்டக்கூடாது. இளைஞர்கள் மற்றும் மகளிரை ஈர்க்கும் வகையில் பணியாற்றுங்கள். ஒவ்வொரு பெண் வாக்காளரையும் நேரில் சந்தித்து திட்டங்களை விளக்க வேண்டும். விருதுநகரில் உள்ள 7 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். 7வது முறையாகவும் நாம் தான் ஆட்சி அமைப்போம்” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.