
இஸ்லாம் பெண் அணிந்திருந்த ஹிஜாப்பை வலுக்கட்டாயமாக ஒரு கும்பல் அகற்றி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், கலப்பர் பகுதியைச் சேர்ந்தவர் 20 வயது ஃபர்ஹீன். இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்த இவர், அந்த பகுதியில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவர் பணியாற்றி வந்த நிறுவனத்தில் சச்சின் என்ற இந்து சமூக ஆணும் வேலை பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தாயின் சம்மதத்தின் பேரில் ஃபர்ஹீன் கடந்த 12ஆம் தேதி கடன் தவணை வசூல் செய்வதற்காக சச்சினுடன் இருசக்கர வாகனத்தில் சுஜ்து பகுதிக்குச் சென்றனர். கடன் தவணை வசூல் செய்துவிட்டு திரும்பி கொண்டிருந்த போது, டார்சி வாலி காலி பகுதியில் 10 பேர் கொண்ட கும்பல் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதன் பின்னர் அங்கிருந்த ஒரு நபர், ஃபர்ஹீன் அணிந்திருந்த ஹிஜாப்பை வலுக்கட்டாயமாக கழற்றி தகாத வார்த்தைகளை திட்டி அகற்றினார்.
அதே நேரத்தில் மற்றவர்கள், ஃபர்ஹீனையும் சச்சினையும் துஷ்பிரயோகம் செய்தும், உடல்ரீதியாகத் துன்புறுத்தியும் தாக்கினர். இந்த சம்பவத்தை, கும்பலில் இருந்த ஒரு நபர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இதனால், அந்த இடத்தில் பொதுமக்கள் கூடினர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களை கலைத்து இருதரப்பினரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து, ஃபர்ஹீன் புகார் கொடுத்ததை அடுத்து, அந்த நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இஸ்லாம் பெண்ணையும், இந்து ஆணையும் ஒரு கும்பல் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.