
உத்தரப் பிரதேச மாநிலம், சம்பல் பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க ஷாஹி ஜமா மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதி, இந்து கோயிலை இடித்து கட்டப்பட்டுள்ளதாக உள்ளூர் நீதிமன்றத்தில் கடந்தாண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மசூதியை ஆய்வு செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்தாண்டு நவம்பர் மாதம் உள்ளூர் போலீஸார் மற்றும் மசூதி நிர்வாகத்தினர் முன்னிலையில் மசூதியில் ஆய்வு செய்வதற்காக வந்த போது ஆய்வுக் குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் மீது கல் வீச்சு தாக்குதல் நடந்தது. இந்த மோதலில் வாகனங்கள் எரிப்பு போன்ற பயங்கர வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் 4க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோர் காயப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த மசூதி வளாகத்திற்குள் விலங்கின் தலையை ஒரு மர்ம நபர் வீசிய சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாஹி ஜமா மசூதி வளாகத்திற்குள் மர்ம நபர் ஒருவர் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு கையில் ஒரு பையோடு வருகிறார். அந்த பையில் இருந்த விலங்கின் தலையை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்கிறார். இது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 100க்கும் மேற்பட்ட போலீசார் விரிவான கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதில், 42 வயதான நசாருதீன் என்பவரை அடையாளம் காணப்பட்டார். உடனடியாக அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், உள்ளூர் கடை ஒன்றில் இருந்து துண்டிக்கப்பட்ட விலங்கின் தலையை ரூ.250 நசாருதீன் வாங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த செயலுக்கு பின்னால் எதேனும் திட்டமிட்ட காரணம் இருக்குமா? அல்லது இந்த சம்பவத்தில் வேறு யாரேனும் ஈடுபட்டார்களா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.