Skip to main content

மனைவி கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு சடலத்தின் அருகேயே இருந்த கணவர்! 

Published on 06/05/2022 | Edited on 06/05/2022

 

Husband arrested in wife case near pudhucherry

 

புதுச்சேரி திருபுவனை அடுத்த கலிதீர்த்தான்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி(54). இவர், மதகடிப்பட்டில் உள்ள காய்கறி மொத்த விற்பனை கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செந்தமிழ்ச்செல்வி(46). பி.எஸ்.சி முடித்த இவர், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இவர்களது மகன் யுவராஜ்(23). எம்.பி.பி.எஸ் முடித்த இவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார்.


இந்த நிலையில் சமீபகாலமாக தம்பதி இடையே அடிக்கடி குடும்ப சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்றுவிட்டு இரவு 10.30 மணியளவில் கலியமூர்த்தி வீடு திரும்பியுள்ளார். மருத்துவரான மகன் இரவு நேர பணிக்கு சென்று விட்டதாக தெரிகிறது. அப்போது உணவருந்தும் போது கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த கலியமூர்த்தி அங்கிருந்த துண்டினை எடுத்து மனைவியின் கழுத்தை சுற்றி இறுக்கியுள்ளார். இதில் செந்தமிழ்ச்செல்வி மூச்சுத்திணறி மயக்கமடைந்துள்ளார். 


அதனால் அவரை அப்படியே போட்டுவிட்டு தனது அறைக்கு சென்றுள்ளார் கலியமூர்த்தி. பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து போது மனைவி பிணமாக கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர் காலை வரையில் மனைவிக்கு அருகிலேயே அமர்ந்திருந்துள்ளார். அதிகாலையில் தனது உறவினர்களிடம் நடந்த சம்பவத்தை அரைகுறையாக கூறிவிட்டு கலியமூர்த்தி அங்கிருந்து தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.


இதையடுத்து சந்தேகமடைந்த உறவினர்கள் கலியமூர்த்தி வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்துள்ளனர். அப்போது செந்தமிழ்ச்செல்வி கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக திருபுவனை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து காவல் கண்காணிப்பாளர் ஜிந்தா கோதண்டராமன் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர் ராஜ்குமார், உதவி ஆய்வாளர் குமரவேல் தலைமையிலான போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த செந்தமிழ்செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உறவினர்களிடம் புகாரை பெற்ற போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கலியமூர்த்தியை தேடிவந்தனர்.


இந்த நிலையில் நேற்று தனிப்படை போலீசாரிடம் கலியமூர்த்தி சிக்கியுள்ளார். அவரை ரகசிய இடத்தில் வைத்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்