கடலூர் சிப்காட் அருகே உள்ள சின்ன காரைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயபாலன். இவர் சிப்காட் ஒப்பந்ததாரர் ஆவார். இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு ஒரு பாம்பு வருவதைக் கண்ட அவர் அந்த பாம்பினை துரத்தி விட்டுள்ளார். அப்போது அந்த பாம்பு செருப்புகள் வைக்கும் பகுதிக்கு சென்றுவிட்டது. இதனைத் தொடர்ந்து அவர் இது குறித்து கடலூரில் உள்ள வன ஆர்வலரான சல்லாவிற்குத் தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து செல்லா, விஜயபாலன் வீட்டிற்குச் சென்று செருப்பு வைக்கும் பகுதியில் இருந்த ஷூக்களை பாதுகாப்புடன் எடுத்துப் பார்த்தார். அப்போது அந்த வீட்டின் பள்ளி குழந்தைகள் பயன்படுத்தும் ஒரு ஷூவுக்குள் 3 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு பதுங்கி இருந்தது தெரிய வந்தது. அந்தப் பாம்பினை பிடித்த செல்லா அதனைப் பாட்டிலில் அடைத்து பத்திரமாக எடுத்துக் காப்புக் காட்டில் விட்டார்.
இது தொடர்பாக வன ஆர்வலர் செல்லா தெரிவிக்கையில், “தற்போது மழைக் காலங்கள் என்பதால் பாம்புகள் தங்குவதற்கு இடம் இன்றி குடியிருப்பு பகுதிகளில் நோக்கி வரும் என்றும் அதன் காரணமாக இந்த நாட்களில் ஷூ மற்றும் செருப்புகளைச் சிறிது உயரமான இடத்தில் வைத்தால் பாம்புகள் அதில் பதுங்குவதற்கு வாய்ப்பு இல்லை. பாதுகாப்பு இல்லாத இடங்களில் ஷூக்களை விடும்பொழுது பாம்புகள் அதனுள் பதுங்குவதற்காக ஏற்ற இடமாக இருப்பதால் அதனுள் தங்கிவிடும்” என்று அறிவுறுத்தினார்.