Skip to main content

“ஒருவேளை எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால்...” - பிரதமரைத் தொடர்ந்து அமித்ஷா பேச்சால் சர்ச்சை!

Published on 09/05/2024 | Edited on 09/05/2024
Controversy over Amit Shah's speech following the Prime Minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து, கேரளா, கர்நாடகா போன்ற 89 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. அடுத்ததாக 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளில் நேற்று (07.05.2024) மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டத் தேர்தல்களை எதிர்கொண்டு பல மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்று, வருகிற ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொண்டு, காங்கிரஸ், பா.ஜ.க, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலம், லகிம்பூர் கேரி பகுதியில் நேற்று (08-05-24) பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். அதில் அவர், “ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி மீண்டும் பூமிக்கு வந்தால் கூட, சி.ஏ.ஏவை ரத்து செய்ய முடியாது. பிரதமர் மோடியின் தலைமையில், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து வந்த சிறுபான்மையினருக்கு இந்தியா குடியுரிமை வழங்கும். 

நீங்கள் நரேந்திர மோடியை இரண்டாவது முறையாக பிரதமராக்கியதும், ராம ஜென்மபூமி தொடர்பான சட்டப் பிரச்சனையில் வெற்றி பெற்றது மட்டுமின்றி, ராமர் கோவிலின் பூமி பூஜையும், அதன் பிரான் பிரதிஷ்டையும் (கும்பாபிஷேகம்) ஜனவரியில் நடத்தப்பட்டது. சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ராம் கோபால் கோவில் பயனற்றது என்கிறார். அது நடக்காது என்றாலும், ஒருவேளை எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், அவர்கள் ராமர் கோவிலுக்கு பாபர் பூட்டு போடுவார்கள்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்