ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் கடந்த 30ஆம் தேதி (30.12.2024) வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது தளத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது. அதன்படி ஸ்பேடெக்ஸ் - ஏ மற்றும் பி என 2 சிறிய செயற்கைக்கோள்களை இந்த ராக்கெட் சுமந்து சென்றது.
அதே சமயம் செயற்கைக் கோள்களின் செயல்பாடுகள் திட்டமிட்டபடி செயல்படுவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்திருந்தனர். மேலும் பூமியில் இருந்து 500 கி.மீ. உயரத்தில் உள்ள வட்டப் பாதையில் இந்த செயற்கைக்கோள்கள் வலம் வருகின்றன. இந்நிலையில் பி.எஸ்.எல்.வி., சி60 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட கிரப்ஸ் (CROPS) கருவியில் காராமணி எனப்படும் தட்டைப்பயிரின் விதைகள் அனுப்பப்பட்டன.
அதாவது விண்வெளியில் தாவரம் வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட கிரப்ஸ் கருவியில் வைக்கப்பட்ட காராமணி பயறு விதைகள் முளை விடத் தொடங்கின. இது தொடர்பான படங்களை எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள இஸ்ரோ, “ பி.எஸ்.எல்.வி.- சி 60 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட கிரப்ஸ் கருவியில், பயிர் வளர்ப்பு சோதனை வெற்றி அடைந்துள்ளது. காராமணி விதையில் இருந்து இலைகள் துளிர் விட்டுள்ளது. இது இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் மிகப்பெரிய சாதனை மைல்கல் ஆகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.