சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் அருகே கூட்டுப்பயிற்சி முடித்துவிட்டு ராணுவ வீரர்கள் வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது நக்சலைட்டுகள், ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த வாகனத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்த்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் ராணுவ வீரர்கள் பயணித்த வாகனம் வெடித்துச் சிதறியது. இந்த தாக்குதலில் சிக்கி 9 ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஐ.ஜி. பஸ்தார் பி. சுந்தர்ராஜ் கூறுகையில், “நாராயண்பூர் மாவட்டம், தண்டேவாடா, பிஜாப்பூர் பகுதியில் கடந்த 3 நாட்களாக நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை நடந்து வருகிறது. இந்த நடவடிக்கையின் போது, நாங்கள் 5 நக்சல்களின் உடல்களை மீட்டோம். ஒரு ஜவான் உயிரிழந்தார். இத்தகைய சூழலில் தான் பீஜப்பூர் அம்பேலி பகுதியில் இந்த குழுவினர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, நக்சலைட்டுகளால் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 8 தண்டேவாடா டி.ஆர்.ஜி. ஜவான்கள் மற்றும் ஒரு ஓட்டுநர் என 9 பேர் உயிரிழந்தனர்” எனத் தெரிவித்தார்.
மேலும் ராய்ப்பூரில் சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “நாங்கள் ஆட்சிக்கு வந்து 1 வருடத்திற்கு மேல் ஆகிறது என்பது இந்த நாட்டிற்கும் தெரியும். நக்சலைட்டுகளுக்கு எதிராக நமது வீரர்கள் வலுவாகப் போராடி வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சரும் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சலிசத்தை ஒழிக்க உறுதி பூண்டுள்ளார். அவரது உறுதிப்பாடு நிறைவேறும் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.