Skip to main content

ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் கொடூரக் கொலை!

Published on 06/01/2025 | Edited on 06/01/2025
Journalist who exposed corruption in Chhattisgarh incident

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் ரூ.120 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணியில் ஊழல் முறைகேடு நடந்திருப்பதாக பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர்(28) ஆதாரத்தோடு அம்பலப்படுத்தி இருந்தார். மேலும், அதில் சாலை கட்டுமானப்பணி ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகர் மீது ஊழல் குற்றம் சாட்டப்பட்டது. இந்த செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தொடர்ந்து, மாநில பொதுப்பணித் துறை இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்த செய்தியினை சேகரித்த பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர் கடந்த 1 ஆம் தேதி இரவில் திடீரென காணாமல் போனார். இவரை எங்குத் தேடியும் கிடைக்காததால் அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரில், முகேஷ் கடைசியாக, சுரேஷ் சந்திரகரின் சகோதரர் அழைத்தன் பேரில் சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், கடந்த 3 ஆம் தேதி பீஜப்பூரின் சட்டன்பரா பஸ்தியில் இருக்கும் ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகர் வீட்டில் இருக்கும் கழிவுநீர் தொட்டியிலிருந்து முகேஷ் சந்திரகரின் சடலத்தை மீட்டனர். இது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது கொலை விவகாரத்தில், சுரேஷ் சந்திரகரின் சகோதரர்களான தினேஷ் சந்திரகர் மற்றும் ரித்தேஷ் சந்திரகர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே முக்கிய குற்றவாளியான சுரேஷ் சந்திரகர் தலைமறைவாகிய நிலையில், தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். பத்திரிகையாளர் முகேஷுன் கொலைக்கு காரணமான நபர்களுக்கு உரியத் தண்டனை பெற்றுத் தரப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்தார்.

இதனிடையே,பத்திரிகையாளர் கொலை கண்டித்துள்ள சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ், பாஜக ஆட்சியில் மாநிலத்தின் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாகக் குற்றம்சாட்டியது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி, “முகேஷ் ஊழலை அம்பலப்படுத்தியதால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மாநில அரசு கடுமையான மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும், மேலும் இறந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு மற்றும் வேலை வழங்கப் பரிசீலிக்க வேண்டும்” என்றார்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சுரேஷ் சந்திரகரை சிறப்புப் புலனாய்வு போலீசார் நேற்று ஹைதராபாத்தில் வைத்து கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவரை சத்தீஸ்கர் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, வெளியான பிரேதப்பரிசோதனை அறிக்கையில்,  முகேஷின் தலையில் 15 இடங்களில் காயம், கழுத்து முறிவு, இதயத்தை கிழித்து கொடூரமாக கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்