பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பெற்றோரை முறையாக பராமரிக்காத பிள்ளைகளுக்கு மூன்று மாத சிறை தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. இதனை ஆறுமாத காலமாக உயர்த்த சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் 2007, பெற்றோரை முறையாக பராமரிக்காத மகன், மகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு மூன்று மாதகால சிறைத்தண்டனை வழங்குவதை உறுதிசெய்கிறது.
இந்த சட்டத்தில் புதிய திருத்தமாக சிறைத்தண்டனையை மூன்றிலிருந்து ஆறாக உயர்த்துதல், பராமரிப்புத் தொகையை அதிகப்படுத்துதல், மகன், மகள் மற்றும் பேரக்குழந்தைகள் மட்டுமின்றி மருமகன், மருமகள் மற்றும் தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகளுக்கும் தண்டனை வழங்குவது குறித்த பரிந்துரையை சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை வழங்கியிருக்கிறது. இந்தப் பரிந்துரையின் மீதான பரிசீலனையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பான அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.