
பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறித்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா கடந்த 7ஆம் தேதி நள்ளிரவு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை மீறி தாக்குதல் நடத்தி வருகிறனர். இந்த தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் என 16 உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
அதே சமயம் காஷ்மீரின் சம்பா வழியாக ஜெய்ஸ் - இ - முகமது அமைப்பைச் சேர்ந்த 7 பேர் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த எல்லைப் பாதுகாப்பு படைவீரர்கள் 7 பேரையும் சுட்டுக் கொன்றனர். இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே தொடர் தாக்குதல் நடைபெற்று வருவதால் எல்லை பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டு வருகிறது. அதே நேரத்தில், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு படைகளின் நடமாட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்யாதீர்கள் என இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘அனைத்து ஊடகங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் தனிநபர்கள் ஆகியோர் ராணுவ நடவடிக்கைகள், பாதுகாப்புப் படைகளின் நடமாட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்யாதீர்கள், செய்தியாக்காதீர்கள். அத்தகைய செய்திகளை வெளியிடுவதன் மூலம் ராணுவ முயற்சிகளைக் குலைத்து உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும். கார்கில் போர், 26/11 தாக்குதல், காந்தஹார் விமான கடத்தல் சம்பவங்கள் இதன் ஆபத்தை நிரூபித்துள்ளன; கேபிள் டிவி விதிகள் 2021, பிரிவு 6(1)(P) படி, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விளக்கங்களை மட்டுமே வெளியிட அனுமதி இருக்கிறது; அனைவரும் இதை கடைப்பிடிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.