
‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் முப்படைகள் கூட்டாக இணைந்து பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலாப் பயணிகளை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் நடந்துள்ளது. இந்தியா நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை மீறி தாக்குதல் நடத்தி வருகிறனர். இந்த தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் என 16 உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
அதே சமயம், காஷ்மீரின் சம்பா வழியாக ஜெய்ஸ் - இ - முகமது அமைப்பைச் சேர்ந்த 7 பேர் நேற்று இரவு இந்தியாவிற்குள் நுழைய முயன்ற போது, எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் அவர்களை சுட்டுக் கொன்றனர். இதனிடையே, இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தானின் இரண்டு போர் விமானங்கள் இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே பதில் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் எல்லைப் பகுதிகளில் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலச் செயலர்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள அந்த கடிதத்தில், இருநாடுகளுக்கும் இடையே ஏற்பட்டு வரும் தாக்குதலை தொடர்ந்து, அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. மருந்துகள், உணவுப்பொருட்கள், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.