
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் தாளவாடி, கடம்பூர், ஆசனூர் வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. தற்போது கோடை வெயில் வாட்டி வதைப்பதால் வனப்பகுதியில் நீர்நிலைகள் வறண்டு போக தொடங்கியுள்ளது. இதனால் உணவு தண்ணீரை தேடி சமீப காலமாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் கிராமத்துக்குள் புகுந்து விலை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் பவானிசாகர் அணைப்பகுதி அருகே உள்ள கீழ பவானி வாய்க்கால் அருகே கடந்த சில நாட்களாக வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை ஒன்று சுற்றி திரிந்து வருகிறது. தற்போது விடுமுறை என்பதால் பவானிசாகர் அணை மற்றும் பூங்காவை பார்க்க தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் பல்வேறு இடங்களில் இருந்து வருகின்றனர். அவர்கள் யானை நடமாட்டம் குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர். உடனடியாக வனத்துறையினர் ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.