
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று முன்தினம் (07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். 9 இடங்களில் இலக்குகளைக் குறிவைத்து தீவிரவாத அமைப்புகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இத்தகைய சூழலில் தான் ஜம்மு - காஷ்மீரின் எல்லைக் கிராமத்தில் நேற்று (08.05.2025) இரவு பாகிஸ்தான் நடத்திய கடுமையான தாக்குதலின் போது பொதுமக்களின் வீடுகள் மற்றும் கடைகள் எரிந்து சேதமடைந்தன. பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் வாகனங்கள் மற்றும் கடைகள் சேதமடைந்தன. அதே சமயம் காஷ்மீரின் சம்பா வழியாக ஜெய்ஸ் - இ - முகமது அமைப்பைச் சேர்ந்த 7 பேர் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த எல்லைப் பாதுகாப்பு படைவீரர்கள் 7 பேரையும் சுட்டுக் கொன்றனர். இதன் மூலம் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற ஜெய்ஸ் - இ - முகமது அமைப்பைச் சேர்ந்த 7 பேரின் இந்த முயற்சியானது முறியடிக்கப்பட்டது.
இந்நிலையில் எல்லையோரங்களில் பாதுகாப்பை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் இந்திய ராணுவத்திற்கு பணியாளர்களைச் சேர்க்கவும், அதன் பலத்தை அதிகரிக்கவும், நிதி ஒதுக்கவும் இந்திய ராணுவ தளபதிக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்திய ராணுவ விதி1948யின் படி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரவை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த அதிகாரம் வரும் 2028ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அடுத்த 3 வருடங்களுக்கு ராணுவ தளபதி மற்றும் அதன் தலைமை அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி எல்லையோரங்களில் உள்ள மாநிலங்களில் நிலவும் பதற்றத்தைக் குறைக்கும் வகையிலும், பாதுகாப்பை அதிகரிக்கும் வகையிலும் ராணுவத்தில் உள்ள பல உட்பிரிவுகளில் இருந்து ஆட்களை தங்களுடைய ரெஜிமெண்ட்லில் வந்து இணைத்துக் கொள்ளலாம். அதாவது நிர்வாக ரீதியான மாறுதல்களைப் பிறப்பிக்கலாம். அதற்கான அதிகாரங்கள் ராணுவ தளபதிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்திய ராணுவத்தில் 32 பிராந்திய ஆர்மிகள் இருக்கின்றது.

அதில் 14 காலாட்படைகள் அடங்கும். அதாவது தெற்கு பிராந்திய கமாண்ட், கிழக்கு பிராந்திய கமாண்ட், மேற்கு பிராந்திய கமாண்ட், மத்திய பிராந்திய கமாண்ட், வடக்கு பிராந்திய கமாண்ட், தென்மேற்கு கமாண்ட், அந்தமான் நிக்கோபார்க் கமாண்ட், ஆர்மி பயிற்சி என 14உட்பிரிவுகளில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து ராணுவ வீரர்கள் பணியாற்றுவார்கள். அந்த வகையில் பல மாநிலங்களில் பணியாற்றும் ராணுவ வீரர்கள் அவசியம் இருந்தாலோ தேவைப்பட்டாலோ பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என விரும்பினாலோ அவர்கள் எல்லையோர பகுதிகளுக்குள் அழைத்துக் கொள்ளலாம் என்ற அதிகாரம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக ராணுவத்திற்குத் தேவையான நிதியை ஒதுக்கவும் பாதுகாப்புத் துறை அமைச்சரகம் தகவல் தெரிவித்துள்ளது.