
ராயப்பேட்டை மாசிலாமணி சாலையில் வசித்து வருபவர் டாக்டர் உமா மகேஸ்வரி ஐஏஎஸ். வணிக வரித் துறையில் இணை ஆணையராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை (மே 8) உமா மகேஸ்வரி தனது கணவர் விமலுடன் ராயப்பேட்டை பாலாஜி நகர் முதல் தெருவில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது சுரேஷ் என்பவர் தனது தனது வளர்ப்பு நாய்யுடம் அந்த பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் உரிமையாளரை மீறி அந்த வளர்ப்பு நாய் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த ஐ.ஏ.எஸ் உமா மகேஸ்வரியை இரண்டு முறை கடித்துள்ளது. இதனை தொடர்ந்து காயமடைந்த உமா மகேஸ்வரியை அவரது கணவர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளார்.
இதையடுத்து உமா மகேஸ்வரி தரப்பில் இருந்து நாயின் உரிமையாளர் சுரேஷ் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்மைக் காலங்களில் தமிழகத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.