
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று முன்தினம் (07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். 9 இடங்களில் இலக்குகளை குறிவைத்து தீவிரவாத அமைப்புகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இத்தகைய சூழலில் தான் நேற்று (08.05.2025) இரவு பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லைகள் வழியாக பாகிஸ்தான் சார்பில் பல்வேறு இடங்களுக்கு ஆளில்லா விமானங்களை அனுப்ப மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. அதாவது , உதம்பூர், சம்பா, ஜம்மு, அக்னூர், நக்ரோட்டா மற்றும் பதான்கோட் பகுதிகளில் இந்திய ராணுவ வான் பாதுகாப்பு பிரிவுகளால் நடத்தப்பட்ட பெரிய அளவிலான எதிர் ஆயுத நடவடிக்கையின் போது 50க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் வெற்றிகரமாக செயலிழக்கச் செய்யப்பட்டன. இதில் அதிநவீன உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டன. இது வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்திய ராணுவத்தின் வலுவான திறனை நிரூபிக்கிறது என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மற்றொருபுறம் சுமார் 8 ஆயிரம் எக்ஸ் சமூக வலைத்தளக் கணக்குகளை முடக்க எக்ஸ் நிறுவனத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இதனையடுத்து அந்த சமூக வலைத்தளக் கணக்குகளை முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ராஜஸ்தானில் எல்லையோர நகரங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. பதான் கோட்டில் பாகிஸ்தான் ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்ஸ், “இந்தியா - பாகிஸ்தான் மோதலில் தலையிடமாட்டோம். இந்த மோதலை நிறுத்துவது எங்கள் வேலை அல்ல. அதே சமயம் மோதலை நிறுத்தும் கட்டுப்பாடும் எங்களிடம் இல்லை. பதற்றத்தைத் தணிக்க இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் முன்வர வேண்டும். இந்த பதற்றத்தை தனிக்க வேண்டுமானால் முயற்சிப்போம். அதாவது அரசியல் ரீதியாகப் பிரச்சனையைத் தீர்க்க முயற்சி மேற்கொள்வோம். போரைக் கைவிட இரு நாடுகளிடமும் நாங்கள் கூற முடியாது. இந்த மோதல் பிராந்திய போராகவோ, அணு ஆயுத போராகவோ மாறிவிடக்கூடாது என எதிர்பார்க்கிறோம். அவ்வாறு மாறது எனவும் நம்புகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.