Skip to main content

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு குறைப்பு

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Reduction of discharge of excess water from Chembarambakkam Lake

 

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. அந்த வகையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1431 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 21.65 அடி உயரத்திற்கு நீர் நிரம்பியுள்ளது.

 

அதே சமயம் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 25 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், ஏரியின் பாதுகாப்பு கருதி கடந்த 28 ஆம் தேதி (28.11.2023) காலை 10 மணி முதல் 200 கன அடியாக உபரிநீர் திறக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று முன்தினம் (29.11.2023) காலை 9 மணி முதல் ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரிநீர் மேலும் அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு 1,000 கன அடி நீர் எனவும், அதன் பிறகு 2500 கன அடி நீர் எனவும் திறக்கப்பட்டு வந்தது.

 

இதனையடுத்து நேற்று (30.11.2023) காலை 8 மணி முதல் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 4000 கன அடியாக குறைக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் வினாடிக்கு 4000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், ஏரிக்கு வரும் நீர் வரத்து தற்போது குறைந்ததால் வெளியேற்றப்படும் உபரி நீர் வினாடிக்கு 400 கன அடியாக குறைக்கப்பட்டு நீர் திறக்கப்பட்டு வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தண்ணீர் தட்டுப்பாடு ; தாக்குபிடிக்குமா 'சென்னை'

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Water scarcity; Attacking 'Chennai'

கோடைகால வெயிலின் தாக்கம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசும் மேற்கொண்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்கும் உப்பு சர்க்கரை கரைசல் எனும் ஓ.ஆர்.எஸ் கரைசலை ஆயத்தமாக வைத்திருக்க தமிழக சுகாதாரத்துறைக்கு அரசு அறிவுறுத்தல் கொடுத்துள்ளது. 

கோடை காலங்களில் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெயிலின் தாக்கத்தை தனித்து கொள்வதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றைத் தாண்டி மூன்றாவது காரணியாக பார்க்கப்படுவது குடிநீர் தட்டுப்பாடு. சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது போன்ற செய்திகள் தென்படுவதே இதற்கான சான்று. அதேபோல் கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை அதிகம் கையாளும் இடமாக சென்னை உள்ளது. பல்வேறு ஏரிகளில் உள்ள நீர் இருப்பை நம்பியே சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு நீக்கப்பட்டு வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் மிக முக்கியமான ஏரி புழல் ஏரி. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. தற்போது புழல் ஏரியில் இருக்கும் நீரின் அளவு 2,942 மில்லியன் கன அடி ஆகும். வினாடிக்கு 570 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 217 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அடுத்து சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சோழவரம் ஏரி. 1,080 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 118 மில்லியன் கன நீர் மட்டுமே உள்ளது. தற்போது நீர்வரத்து இல்லாத நிலையில் சோழவரம் ஏரியில் இருந்து 168 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  அடுத்தது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை குடிநீர் தேவையில் முக்கிய பங்காற்றுகிறது. மொத்தம் 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது நீர் இருப்பு 2,384 மில்லியன் கன அடியாக இருக்கிறது. நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 46 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சென்னையின் அடுத்த குடிநீர் ஆதாரம் பூண்டி ஏரி. 3,231 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு 978 மில்லியன் கன அடியாக உள்ளது. இந்த ஏரிக்கும் நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 525 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டு காணப்படும் நிலை இருக்கிறது. 1,475 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு கணக்கிட முடியாத அளவிற்கு மிகவும் குறைவாக இருக்கிறது. வீராணம் ஏரியில் நீர்வரத்தும் இல்லை நீர் வெளியேற்றமும் இல்லாத சூழ்நிலை இருக்கிறது.

இப்படி மொத்தமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.75 டிஎம்சி ஆக இருக்கிறது. இதில் வீராணம் ஏரி முற்றிலும் வறண்டு விட்ட நிலையில் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் உள்ளிட்ட ஏரிகளில் தற்பொழுது 6.88 டிஎம்சி நீர் மட்டுமே இருக்கிறது. வரும் கோடை காலத்தில் இந்த அளவு தண்ணீரே சென்னையின் குடிநீர் பிரச்சனையை தீர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.