தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார். அதன்படி பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உறுதியாகியுள்ளன.
அந்த வகையில் ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் முதலீட்டாளர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (05.02.2024) மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். அம்போ வால்வ்ஸ் (ampo valves), இங்கிடீம் (ingeteam), கோர்லான் (gorlan) உள்ளிட்ட தொழில் நிறுவனங்களை சார்ந்த தொழிலதிபர்களைச் சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, கைடன்ஸ் (guidance) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும், தலைமைச் செயல் அலுவலருமான வே.விஷ்ணு ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து தனது ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிப்ரவரி 7 ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.