புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீபாலாஜி வித்யா பீத் நிகர்நிலை பல்கலைக்கழகம், அதன் சார்பு நிறுவனமான மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கட்டப்பட்டுள்ள பலமாடி கட்டிடங்கள் புதுச்சேரி அரசுக்கு சொந்தமான நீர் பாசன வாய்க்கால், குளம் குட்டைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
அதையடுத்து புதுச்சேரி அரசு நகர குழுமம் மற்றும் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளும் ஆய்வு செய்து இந்நிறுவனம் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டியுள்ளது என்பது உறுதி செய்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு முறையான அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு புதுச்சேரி அரசு நகர குழுமத்தால் சீல் வைக்கப்பட்டது.
ஆனால் சீல் வைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் இன்றும் அந்நிறுவனம் தனது பயன்பாட்டில் பயன்படுத்திக் கொண்டுள்ளது. இது சம்பந்தமாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தற்போது உயர்நீதிமன்றத்தில் இரண்டு நீதி அரசர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்துள்ளது.
அதில் உயர்நீதிமன்ற நீதியரசர், அரசுக்கு சொந்தமான நீர்ப்பாசன வாய்க்கால் குளம் குட்டைகளுக்கு எப்படி தனியாருக்கு அனுமதி வழங்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். நீதிமன்றத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கை தானாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டு இந்திய மெடிக்கல் கவுன்சிலிங் மற்றும் டென்டல் கவுன்சிலிங்கிற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களுக்கு எவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது என்கிற கேள்வியை முன்வைத்து வருகின்ற 22.06.2016 அன்று இந்திய மெடிக்கல் கவுன்சில் மற்றும் டென்டல் கவுன்சில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் அதன் புதுவை மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.