மார்ச் 27 - உலக தியேட்டர் தினம்
தியேட்டர் என்பது நாடகக் கலை நிகழ்த்தப்படும் ஒரு அரங்கை குறிப்பது. முதலில் நாடகக் கலைக்காக இருந்த அரங்குகளில் நாடகத்தை இடம்பெயர்த்து சினிமா வந்தது. இன்று தியேட்டர் என்றாலே சினிமாவைக் குறிப்பிடும் சொல்லாகிவிட்டது. தொழில்நுட்பங்கள் மாறி, புத்தம் புதிய திரைப்படத்தை நாம் வீட்டு வரவேற்பறையிலோ, கணிப்பொறியிலோ அல்லது நம் கைபேசியில் பார்த்தாலும் திரையரங்கில் போய் பார்க்கும் சுகம் கிடைக்கவே கிடைக்காது. ஒரு காலத்தில் ஓலை கொட்டகையாக இருந்த திரையரங்குகள் காலப்போக்கில் பல மாற்றங்கள் அடைந்து இன்று குளிரூட்டப்பட்ட அரங்குகளாக மாறியுள்ளன. இன்று உட்கார்ந்து மட்டுமல்ல படுத்துக்கொண்டே பார்க்கும் வகையில் திரையரங்குகள் வந்துவிட்டன.
1893ல் தாமஸ் ஆல்வா எடிசன் தான் திரைப்படம் ஒளிபரப்பைக் கண்டறிந்தார். கினிட்டோஸ்கோப் என்கிற கருவி மூலம் காட்சியை காட்டினார். அதை முன்மாதிரியாகக் கொண்டு லூமியா சகோதரர்கள் 8 நிமிட முதல் திரைப்படத்தை எடுத்து 1895 டிசம்பர் மாதம் வெளியிட்டார்கள். ஒரு ஹோட்டலில் வைத்து பார்வையாளர்களுக்கு பணம் வாங்கிக்கொண்டு காட்சியை காட்டினார்கள்.
அதன்பின் எடுக்கப்பட்ட தங்களது முதல் திரைப்படத்தை பொதுமக்களுக்கு காண்பித்தது பாரிசீல் உள்ள ஈடன் சினிமாஸ் என்கிற திரையரங்கில் தான். அதுதான் முதல் திரையரங்கம் என கூறப்படுகிறது.
திரையரங்குகள் என்பது ஆரம்பத்தில் நாடக மேடைகளாக இருந்தவை. பின்னர் அவை திரையரங்குகளாக மாறின. நாடக மேடையாக அரங்கங்கள் இருந்தபோது முதல் வரிசையில் அமர்ந்து நாடகத்தை ரசித்தால் அதிக கட்டணம். சினிமா அரங்கமாக மாறிய பின் கடைசி வரிசையில் அமர்ந்து பார்க்க அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இப்படித்தான் மாற்றங்களும் ஏற்பட்டன.
இந்தியாவின் முதல் திரையரங்கம் 1907ல் எல்.ஜே.எஃப் என்கிற நிறுவனத்தால் எல்பின்ஸ்டன் பிக்சர் பேலஸ் என்கிற பெயரில் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் சென்னையில் தற்போது அண்ணா சாலையில் முதன் முதலாக மேஜர் வாரிக் என்பவர் தான் திரையரங்கை 1900ல் கட்டினார். அந்த தியேட்டரின் பெயர் எலக்ட்ரிக் தியேட்டர் என்பதாகும். அந்தத் திரையரங்கம் இப்போது இல்லை. 1914ல் கோவையில் வெரைட்டி ஹால் டாக்கீஸ் என்கிற பெயரில் தொடங்கப்பட்டதே தென்னகத்தின் முதல் நிரந்தரமாகக் கட்டப்பட்ட திரையரங்கம் என்கிறார்கள். அந்தத் திரையரங்கம் இப்போது டிலைட் என்கிற பெயரில் இயங்குகிறது.
டிலைட்
உலகில் அதிக திரைப்படங்கள் தயாரிக்கும் நாடாக இந்தியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த அளவுக்கு திரையரங்குகள் உள்ளனவா எனக்கேட்டால் இல்லையென்று தான் சொல்ல வேண்டும். இந்தியாவில் மட்டும் 3684 திரையரங்கள் உள்ளதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கின்றன. திரையரங்கம் இல்லாத நாடு பூட்டான் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
உலகின் பல நாடுகள் திரையரங்களுக்கு கூடுதல் வரி சலுகைகள் வழங்கி ஊக்குவிக்கின்றன. அதற்குக் காரணம் மனிதன் பேதமில்லாமல் உட்காரும் இடம் திரையரங்குகள் தான் என்பதோடு சினிமா மிகப்பெரிய தொழில் என்பதாலும் தான்.
உலகில் 32 ஆயிரம் சினிமா தியேட்டர்கள் உள்ளது என்கிறது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம். அந்த சங்கமே அமெரிக்காவின் 'மோஷன் தியேட்டர்ஸ்' நிறுவனம் தான் அதிக திரையரங்குகளை சொந்தமாக வைத்துள்ளது என்கிறது.
1948ல் சர்வதேச நாடக நிறுவனம் என்ற ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டது. அதன் தொடர் முயற்சியால் ஐநாவின் சர்வதேச கல்வி - கலாச்சார அமைப்பான யுனஸ்கோ, 1960ல் உலக தியேட்டர் தினத்தைக் கொண்டாடத் துவங்கியது.
1905 நவம்பர் 23ல் தொடங்கப்பட்ட லா ஐடியல் சினிமா என்கிற திரையரங்கம் இன்னும் உள்ளது. இதுவே தற்போதைய நிலையில் உலகின் பழமையான திரையரங்கம் என்கிற பெயரை பெற்றுள்ளது.
வடிவம் மாறினாலும் நடிப்பு என்ற கலைதான் அந்த அரங்கில் பிரதானம். இந்தியாவில், அதுவும் தமிழகத்தில் அந்த நடிப்பு மிகவும் மக்கள் மனதில் மிகப்பெரிய இடத்தைப் பெற்றிருக்கிறது. அந்த அரங்கில் முடிவு செய்யப்பட்ட தலைவர்கள் நாடு முழுவதும் இருக்கிறார்கள்.