Skip to main content

நான்தான் முகேஷ் பேசுறேன்...

Published on 31/05/2018 | Edited on 31/05/2018

நாம் அனைவரும் இந்தக் குரலை கண்டிப்பாக கேட்டிருப்போம், அதே நேரத்தில் இந்த குரலை நம்மால் மறக்கவும் முடியாது. புகையிலை பழக்கத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர் முகேஷ் அதைப்பற்றிய விழிப்புணர்வு விளம்பரத்தில், புகைப்பழகத்தால் தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை விளக்குவார். இன்று சர்வதேச புகையிலை ஒழிப்பு தினம்... புகையிலையினாலும் அதன் பயன்பாட்டினாலும் உலகில் ஒவ்வொரு ஆறு நிமிடத்திற்கும் ஒரு மரணம் நிகழ்கிறது என்கிறது ஆய்வறிக்கை. ஒவ்வொரு சிகரெட்டும் ஒரு மனிதனின் வாழ்நாளில் 11 நிமிடங்களை குறைத்துவிடுகின்றது அப்போ கணக்கில்லாமல் ஊதி தள்ளுபவராக நீங்கள் இருந்தால் எவ்வளவு வாழ்நாட்களை உங்கள் புகைப்பழக்கதிற்கு தாரைவார்த்திருப்பீர்கள் என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த கணக்காக இருக்கும்.....

மிக தொன்மையான வரலாறு கொண்டது புகையிலை என்றாலும் இன்று பாக்கெட் கணக்குகளை தாண்டி நாளொரு பொழுதும் தினமொரு நிமிடமுமாக ஊதித்தள்ளி தன்னையும் அழித்து, அருகில் உள்ளவர்களையும் அழித்துவரும் இந்த புகைப்பழக்கம் தோன்றியது அமெரிக்காவில்தான், அதும் குறிப்பாக தென் அமெரிக்காவில். பொழுதுபோக்கு அம்சமாக தோன்றிய இந்த புகையிலைப் பண்பாடு காலப்போக்கில் வாணிப பொருளாகவும் மாறியது. பிறகு இந்த பழக்கம் அங்கிருந்து ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு பரவி இன்று உலகம் முழுவதும் முற்றிலும் ஒழிக்கமுடியாத விஷமாக மாறியுள்ளது. ஆனால் இந்த புகையிலை முறை நவீனமாகி சிகரெட் எனும் வடிவம் பெற்றது என்னவோ  18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் கியூபா நாட்டிலும், கரீபியன் தீவு போன்ற நாடுகளிலும்தான். இந்தியாவைப் பொறுத்தவரை 17 நூற்றாண்டிலேயே புகையிலை காலெடுத்து வைத்தது. 

 

SMOKING

 

 

 

இந்த உலகம் கற்றுக்கொண்ட ஒவ்வொரு பழக்கமும் நன்மையா? தீமையா? என்பது முற்றிலும் நிரூபணமாக பல நாட்கள், பல ஆண்டுகள் ஆகும். அப்படித்தான் இந்த புகையிலை பழக்கமும் மிகவும் கொடிய விளைவுகளை தரும் என்ற உண்மை அறிவியல் முறைப்படி நிரூபணமாக நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டது. 20 நூற்றாண்டிற்கு பிறகுதான் இது ஆபத்தானது என்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்தும் புகையிலையை ஒழிப்பதில் தீவிரம் காட்டினாலும். இன்று வரை முற்றிலும் ஒழிக்கப்படமுடியாத ஒரு பழக்கமாக மாறிவிட்டது புகையிலை பழக்கம். 
 

 

 

ஒருபக்கம் தனிமனித உயிர் சேதத்தை ஏற்படுத்தும் என்பதைத் தாண்டி அது அருகிலிருப்பவர்களையும் பாதிக்கும் என்பதே உண்மை. அதேபோல் சுற்றுசூழலில் புகையிலை கழிவுகள் ஏற்பத்துடும் பாதிப்பை  உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ஒருநாளில் விற்பனையாகும் 15 பில்லியன் சிக்ரெட்களில் 10 பில்லியன் சிகரெட் கழிவுகள் சுற்றுசூழலை பாதிக்கின்றன. அதேபோல் கடற்கரை மற்றும் ஊரக கழிவுகளில் 30 லிருந்து 40 சதவிகித கழிவுகள் சிகரெட் பஞ்சுகளால் நிரப்பட்டுள்ளன என்று உள்ளது. ஒரு சிகரெட்டில் நிக்கோடின், கார்பன் மோனாக்சைட், தார் என 4000க்கும் மேற்பட்ட நச்சு பொருட்கள் உள்ளது. இதனால் புற்றுநோய், பக்கவாதம், வாய்கட்டி போன்ற மோசமான உயிர்க்கொல்லி நோய்கள் புகைப்பவரை தாக்கும் என்பதும் எப்போதோ நிரூபணமான ஒன்று. புகையிலையில் இருக்கும் தார் எனும் பாலிசைக்ளிக் ஹைட்ரோகார்பன்தான்  புற்றுநோய்க்கு காரணம். புள்ளிவிவரப்படி இந்தியாவில் மட்டும்10 லட்சம் பேர் புகையிலை பழக்கத்தால் உருவாகும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர்.
 

SMOKING

    

ஒரு நாட்டின் வலிமை என்பது ஆரோக்கியமான மனித சக்திகளின் செயல்முறைகளை அடிப்படையாக கொண்டது. அப்படி இருக்க உயிரைக் கொல்லும் புகையிலை நாட்டிற்கு தேவையில்லை என்பதில் அரசு கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும், தனிமனித கட்டுப்பாடும் அவசியம். அப்படி தனிமனித கட்டுப்பாடு இல்லையெனில் புகையிலை ஒழிப்பு என்பது பெயரளவிலேயே இருக்கும். இந்தியாவை பொறுத்தவரை ''இளைய சமுதாயம்”தான் நாட்டின் முதுகெலும்பு என பல புகழாரங்கள் இருந்தாலும், ஆரோக்கியமான இளைய சமுதாயம் புகையிலை பழக்கத்தில் மாட்டி சீரழிந்து விடுமோ என்பதே பல சமூக சிந்தனையாளர்களின் பயமாகவும் இருக்கின்றது. புகையிலை இல்லா சமுதாயம்.... புகைப்பவர் இல்லாதா சமுதாயம்..... அமைத்து நம் ஆரோக்கியத்தை மட்டுமல்ல மற்றவர்களின் ஆரோக்கியத்தையும் காப்போம் நண்பர்களே, இந்த புகையிலை ஒழிப்பு நாளில் இருந்தாவது...