Skip to main content

விவசாயிகள் ரோட்டில் கொல்லப்படுகிறார்கள்... தமிழ்நாட்டில் கோயிலை திறக்க சொல்லி போராடுகிறார்கள் - கொந்தளித்த சூர்யா சேவியர்!

Published on 07/10/2021 | Edited on 07/10/2021

 

hjk

 

மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் திருத்த சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இதன் ஒருபகுதியாக லக்கிம்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் மீது கார் ஏற்றியதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக அரசியல் விமர்சகர் சூர்யா சேவியரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு, 

 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய திருத்த சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் மாதக்கணக்கில் போராட்டம் நடத்திவருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக உ.பி-யில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தபோது, மத்திய இணை அமைச்சரின் மகன் வந்த கார் மோதி நான்கு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம்  அங்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்? 

 

இந்தியா உலக அளவில் முன்னேறிக்கொண்டிருப்பதாக சொல்லிக்கொண்டிருக்கின்ற வேளையில், உ.பி.யில் சட்டத்துக்கு விரோதமான ஆட்சி நடைபெற்றுவருகிறது. காட்டுமிராண்டிகளைவிட கொடூரமான செயல்கள் அங்கே நடைபெற்றுவருகிறது. கார் ஏற்றி மக்கள் கொல்லப்படுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இவர்கள் தாங்கள் நிஜமான காட்டுமிராண்டிகள் என்பதை அடிக்கடி நினைவுப்படுத்திவருகிறார்கள். வாழ்வாதார போராட்டம் செய்வதைக் கூட இவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அன்றையை மேற்கு வங்க முதல்வர் இவர்களைப் பார்த்து காட்டுமிராண்டிகள் என்று கூறினார். அதைத் கூட தயவு செய்து மறுபரிசீலனை செய்யுங்கள் என்று ஜோதிபாசுவுக்கு வாஜ்பாய் அவர்கள் கோரிக்கை விடுத்தார். இல்லை, நான் மறுபடியும் சொல்கிறேன், நீங்கள் அனைவரும் காட்டுமிராண்டிகள்தான் என்றார். 

 

அந்த மாநிலத்தில் பெண்கள் மீதான தாக்குதல்கள், பாலியல் வன்கொடுமைகள் செய்யப்படும் நிகழ்வுகள், ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்கள் என அனைத்தும் சில ஆண்டுகளாக எல்லை மீறி செல்கிறது. இதை தடுக்க எந்த நடவடிக்கைகளையும் அந்த மாநில அரசு எடுக்கவில்லை. ஒரு பெண்ணை பலாத்காரம் செய்து முதுகெலும்பை உடைத்து அந்த குடும்பத்துக்கே தெரியாமல் எரித்தார்கள். மக்களைப் புழுக்கள் போல் அவர்கள் நடத்துகிறார்கள். விவசாயிகளைக் கார் ஏற்றிக் கொன்றிருக்கிறார்கள், ஆனால் பிரதமரோ, மற்ற அமைச்சர்களோ, மாநில முதல்வரோ என யாரும் ஒரு வார்த்தை இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை, வருத்தம் தெரிவிக்கவில்லை. இங்கே தமிழகத்தில் பாஜகவைச் சேர்ந்த குஷ்பு கடுமையாக கண்டித்திருக்கிறார். அவருக்கு இருக்கும் அக்கறை கூட ஆட்சியாளர்களிடம் இல்லை.

 

இங்கே இருக்கிற பாஜக தலைவர் அண்ணாமலை என்ன சொல்கிறார், அரசியல் கட்சியின் விவசாய சங்கங்கள்தான் வேளாண் மசோதாவை எதிர்க்கிறார்கள். விவசாயிகள் யாரும் அதனை எதிர்க்கவில்லை என்று கூறுகிறார். இவ்வாறு சொல்லிவிட்டு வெள்ளி, சனி, ஞாயிறு என்று கோயில்களைக் கட்டாயம் திறக்க வேண்டும் என போராட போவதாக அறிவித்துள்ளார். குறிப்பிட்ட அந்த நாட்களில் கோயில்களைத் திறக்க வேண்டும் என்று எந்த பொதுமக்கள் போராடினார்கள். விவசாய மசோதாவை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை இந்தியா முழுவதும் நடத்திவருகிறார்கள். அதைப் பற்றி எதுவும் கூறாமல் தேவையில்லாத விஷயங்களைப் பற்றி கருத்து சொல்கிறார்கள், போராட்டம் நடத்த முயல்கிறார்கள். 

 

உச்ச நீதிமன்றத்தில் இந்த விவசாயிகள் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக விவசாயத் துறை அமைச்சர் தோமர் விவசாயிகளிடம் எத்தனை முறை வேண்டுமானாலும் பேச தயாராக இருக்கிறார். அப்படி இருக்கையில் இந்த விவகாரத்தில் போராட என்ன இருக்கிறது என்று பாஜக தரப்பு கேள்வி எழுப்புகிறதே?

 

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் போராடக் கூடாது என்று எந்த சட்டத்தில் கூறியிருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் பாபர் மசூதியை இடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டுத்தான், பாபர் மசூதியை அடுத்த நாளே இடித்தார்கள். இது அனைத்தும் வரலாறு. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது, போராட கூடாது என்றால் இந்தியாவுக்கு விடுதலையே கிடைத்திருக்காது. இந்தியாவில் வழக்கு இருக்கிறது என்ற காரணத்திற்காக போராட கூடாது என்றால், எதற்காவும் நாம் போராட முடியாது. ஏனென்றால் அனைத்திற்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்படும். நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு நிலுவைில் இருக்கிறது. தற்கொலைகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. 

 

வழக்கு நிலுவையில் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கூற வேண்டியதுதானே? போராட கூடாது என்று உச்ச நீதிமன்றம் சொல்லக்கூடாது. நான்கு நீதிபதிகள் சாலைக்கு வந்து போராடினார்களே, அவர்கள் அறையில் பேசிக்கொள்ள வேண்டியதுதானே? நீதிபரிபாலணை செய்ய எங்களுக்குப் பல்வேறு தடைகளை ஏற்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டை எதற்காக முன்வைத்தார்கள். தங்களுக்குள்ளாகவே பேசலாமே, பேசினார்களா? தங்களுக்கு ஒரு நியாயம், அடுத்தவர்களுக்கு ஒரு நியாயம் என்று கூறுவதுதான் ஜனநாயகமா? அவர்களைப் பார்த்து இந்த நீதிமன்றம் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும். அவர்கள் மீது என்ன நடவடிக்கையை எடுத்தார்கள். எனவே நியாயமான போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, அவர்கள் உயிரோடு விளையாட கூடாது.

 

 

Next Story

விவசாயிகள் போராட்டம்; இணைய சேவை துண்டிப்பு!

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
nternet service outage Farmers protest at haryana

ஹரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கத்தார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசு அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அங்குள்ள விவசாயிகள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசு இதற்கு எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது 

அதனால், அனைத்துப் பயிர்களுக்கும் மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் சட்டம் கொண்டுவர வேண்டும் உட்படப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் விவசாய சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். 

விவசாய சங்கத்தினர், மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் முற்றுகைப் போராட்டத்தை வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி அன்று மேற்கொள்ள நாளை (11-02-24) முதல் ஹரியானாவில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டுச் செல்ல உள்ளனர்.

இந்த நிலையில், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கத்தார் அந்த மாநிலத்தில் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, நாளை (11-02-24) முதல் வரும் 13 ஆம் தேதி வரை ஹரியானாவில் ஏழு மாவட்டங்களுக்கு இணைய வழி சேவையை துண்டிக்க உத்தரவிட்டுள்ளார். அதில், அம்பாலா, குருசேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், பதேஹாபாத், சிர்சா ஆகிய மாவட்டங்களில் இணைய சேவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், செல்போனில் பேசுவதற்கான அழைப்புகளைத் தவிர இதர இணைய சேவைகளுக்கு வரும் 13 ஆம் தேதி காலை 6:00 மணி முதல் 13 ஆம் தேதி இரவு 11:59 மணி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

இரு அவைகளிலும் நிறைவேற்றம்... இன்று இரவே சட்டமாகிறது வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் மசோதா? 

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

farmers

 

இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று (29.11.2021) தொடங்கியது. இந்தநிலையில், மக்களவை கூடியதுமே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக முழக்கங்களை எழுப்பினர். இதனால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

 

இதனையடுத்து, மக்களவை மீண்டும் கூடியதும், ஏற்கனவே அறிவித்தபடி மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கான மசோதாவை மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பலத்த அமளிக்கிடையே தாக்கல் செய்தார். அதனைத்தொடர்ந்து அந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.

 

அதேநேரத்தில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதா, விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் மக்களவை 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. இதன்பிறகு அவை மீண்டும் கூடியபோதும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால், அவை நாளை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. இன்று ஒரேநாளில் மக்களவை மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

இதற்கிடையே, மாநிலங்களவையிலும் அமளிகளுக்கிடையே வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில், இந்த மசோதா இன்றே குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட இருப்பதாகவும், இன்றே குடியரசுத் தலைவர் அதற்கு ஒப்புதல் அளிக்க இருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.