சமீபகாலத்தில் இந்திய சினிமாக்காரர்களை வியப்பில் ஆழ்த்திய தெலுங்குப்படம் "அர்ஜுன் ரெட்டி'.புதுமுகங்கள் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிக்க, புதுமுக இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கியிருந்தார். இது அந்தக்கால தேவதாஸ் மாதிரியான ஒரு காதல் கதைதான். ஆனாலும்... வித்தியாசமான திரைக்கதை அமைப்பாலும், நுணுக்கமான காட்சியமைப்பாலும்... வழக்கமான சினிமா மரபுகளை உடைக்கும் ரசனையோடு எடுக்கப்பட்டு, பெரும் வெற்றிபெற்றது.மூர்க்கத்தனம் நிறைந்த அர்ஜுன் ரெட்டி கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டாவின் அசாத்தியமான நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
டைரக்டர் ஸ்ரீதரால் அறிமுகப்படுத்தப்பட்ட விக்ரம் பல படங்களில் நடித்தபோதும் அவரின் திரைவாழ்வில் பெரிய திருப்பம் ஏற்படவில்லை. கடும் போராட்டத்தில் இருந்தவருக்கு டைரக்டர் பாலாவின் முதல்படமான "சேது' பெரும் திருப்புமுனையாக அமைந்தது. முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்தார். "சீயான்' விக்ரம் என்றும் ரசிகர்களிடம் பெயரெடுத்தார் விக்ரம்.
விக்ரமின் மகன் துருவ் அமெரிக்காவில் படித்துவந்த நிலையில்... அவரின் ஆசைப்படியும், துருவ்வின் ஆசைப்படியும் துருவ் சினிமாவில் நடிக்க வந்தார்.
தனக்கு திருப்புமுனை தந்த பாலாவின் இயக்கத்திலேயே தனது மகன் துருவ்வையும் அறிமுகப்படுத்த விரும்பினார் விக்ரம்.
"அர்ஜுன் ரெட்டி' படத்தை தமிழில் ரீ-மேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. பாலா இதற்குமுன் ரீ-மேக் படங்களை இயக்கியதில்லை. விளிம்புநிலை மனிதர்கள் அல்லது புறக்கணிக்கப்பட்ட மனிதர்கள், அவர்களின் வாழ்க்கை, அவர்களின் உலகம்... ஆகியவற்றை தன் சினிமாப் படங்களின் மூலம் பதிவுசெய்பவர் பாலா. பாலாவின் படங்கள் ரசிகர்களின் மனங்களில் பெரும்தாக்கம் ஏற்படுத்துபவை. தேசிய விருதுகளிலும் தாக்கம் ஏற்படுத்துபவை. "பிதாமகன்' விக்ரமிற்கு தேசிய விருதையும், "நான் கடவுள்' பாலாவுக்கு தேசிய விருதையும் பெற்றுத்தந்தது.
விக்ரம் விரும்பி கேட்டுக்கொண்டதால்... "அர்ஜுன் ரெட்டி' படத்தை ரீ-மேக் செய்ய ஒப்புக்கொண்டார். படத்திற்கு "வர்மா' என பெயர் வைக்கப்பட்டது. துருவ்-மேகா சௌத்ரி நடிக்க... முதல் காப்பியை பாலாவின் "பி ஸ்டுடியோ' எடுத்துத் தர.. ஒப்புக்கொண்டு "இ-4 எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தர் முகேஷ் மேத்தா தயாரித்து வந்தார்."பாலா மாமா இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருந்தால்... நான் அமெரிக்காவிலேயே தொடர்ந்து படித்துக்கொண்டிருப்பேன்'' என "வர்மா' பட விழாவில் தெரிவித்தார் துருவ். "பிப்ரவரி-14 காதலர் தினத்திற்கு படம் வெளியாகும்' எனச் சொல்லப்பட்ட நிலையில்... ஓரிரு வாரங்களுக்கு முன் இ-4 நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்ட ஒரு தகவலில்... ‘விலங்குகள் நல வாரியத்திலிருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்படுவதால் மார்ச் மாதம் படம் வெளியாகும் ’எனச் சொல்லப்பட்ட நிலையில்....
"அர்ஜுன் ரெட்டி’ படத்தைப் போல "வர்மா' படம் திருப்தியாக இல்லை'' என்ற கருத்து நிலவியது.படம் பார்த்த விக்ரமிற்கும் படம் பிடிக்கவில்லை. இந்த அதிருப்தியை இ-4 நிறுவனத்திடம் விக்ரம் தெரிவித்தார்.அந்நிறுவனம் சார்பில் பாலாவிடம் ""எங்களுக்கு படம் திருப்தியாக இல்லை'' எனச் சொல்லப்பட...ஜனவரி 22-ஆம் தேதி... பாலாவின் அலுவலகத்தில் பாலாவிற்கும், விக்ரமிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.பட வேலைகள் தொடங்கப்பட்ட நிலையிலேயே "அர்ஜுன் ரெட்டி' படத்தை அப்படியே காட்சிப்படுத்த முடியாது... அதன் கதையமைப்பு உள்வாங்கிக் கொள்ளப்பட்டு... தான் சுதந்திரமாக இயக்க விரும்புவதாக தெரிவித்திருந்ததை குறிப்பிட்ட பாலா... படம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும்... எடுத்த காட்சிகள், மிக்ஸிங் செய்யப்படாத பாடல் காட்சிகள், புகைப்படங்கள், சவுண்ட் ட்ராக் உள்ளிட்ட அனைத்தையும் இ-4 நிறுவனத்திடம் ஒப்படைத்துவிடுவதாகவும், ‘என் பெயரையோ, எனது பி ஸ்டுடியோ நிறுவனப் பெயரையோ "வர்மா' படத்திற்காக பயன்படுத்தக்கூடாது’ என்றும் தெரிவித்து... படத்திலிருந்து முழுமையாக விலகிக்கொள்வதாக பாலா தெரிவித்தார்.இதை இ-4 நிறுவனமும் ஏற்றுக்கொண்டது.
இதையடுத்து பிப்ரவரி 2-ஆம் தேதி இந்த ஷரத்துகள் அடங்கிய ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு பாலாவும், முகேஷ் குப்தாவும் பரஸ்பரம் கையெழுத்திட்டனர்.
இந்நிலையில்... ""பாலா இயக்கிய "வர்மா' படம் தங்களுக்கு திருப்தியாக இல்லாததால், அந்தப் படத்தின் நாயகன் துருவ் தவிர... அனைவரும் நீக்கப்பட்டு... மீண்டும் புதிதாக வேறு பெயரில் "அர்ஜுன் ரெட்டி' படம் ரீ-மேக் செய்யப்பட்டு சில மாதங்களில் வெளியிடப்படும்'' என இ-4 அறிவிக்க...
"தமிழ் சினிமாவில் தன் படைப்பால் பெரும்தாக்கத்தை ஏற்படுத்திவரும் டைரக்டர் பாலா எடுத்து முடித்த படம்... அப்படியே முடக்கப்படுகிறதா? இது பாலாவுக்கு ஏற்பட்ட தோல்வி' என பலவாறும் பேசப்பட்டுவருகிறது."படைப்புச் சுதந்திரம் கருதி "வர்மா' படத்திலிருந்து விலகிக்கொள்வது நானே எடுத்த முடிவு. ஆனால் தயாரிப்பாளர்கள் தவறான தகவல்களை தருகிறார்கள். துருவ்வின் எதிர்கால நலன்கருதி மேலும் பேச விரும்பவில்லை'' என பாலா விளக்கமளித்துள்ளார்.விக்ரமிற்கு "வர்மா' படம் பிடிக்காததால்... விக்ரமின் விருப்பத்தை தங்களின் விருப்பமாக ஏற்று படத்தை கைவிட்டிருக்கிறது இ-4. படத்திற்காக இதுவரை செய்யப்பட்ட செலவுகளை இ-4 நிறுவனத்திற்கு விக்ரம் சரிக்கட்டுவார்... என்று சொல்லப்படுகிறது."அர்ஜுன் ரெட்டி' ரீ-மேக், விக்ரமின் மகன் ஹீரோ, பாலா இயக்கும் படம் என பலப்பல எதிர்பார்ப்புகளோடு கவனிக்கப்பட்ட "வர்மா'’படம் ‘வராது’என்பது வியப்பும், அதிர்ச்சியுமாக இண்டஸ்ட்ரியில் பார்க்கப்படுகிறது... ரசிகர்களிடமும் விவாதிக்கப்பட்டு வருகிறது.