தலித்துகளின் மீதான தொடர் வன்கொடுமை நிகழ்வுகள் மற்றும் தற்கால அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை நம்மோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு பகிர்ந்து கொள்கிறார்.
சமீபத்தில் விழுப்புரம் அருகே நடந்த திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் ஆதிதிராவிட இளைஞர்கள் கோவிலுக்குள் சாமி கும்பிடச் சென்றனர். அவர்களை உள்ளே விடக்கூடாது என்று ஒலிப்பெருக்கி மூலம் சிலர் அறிவித்தனர். இதை எதிர்த்து ஆதிதிராவிட மக்கள் சாலை மறியல் செய்த பிறகு தான் இந்தச் செய்தி வெளியே வருகிறது. கிராமப் பகுதிகளில் உள்ள கோவில்கள் பெரும்பாலும் சாதி வெறியர்களின் கட்டுப்பாட்டில் தான் இன்றும் இருக்கின்றன. யார் உள்ளே வரவேண்டும், வரக்கூடாது என்பதை அவர்கள் தான் கட்டுப்படுத்துகின்றனர். இதைப் பின்னாலிருந்து இயக்குவது பாட்டாளி மக்கள் கட்சி தான்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை வரவேற்கும் டாக்டர் ராமதாஸ், அனைவரும் கோவிலுக்குள் வருவதை ஏன் எதிர்க்க வேண்டும்? சனாதனத்தை ஏற்றுக்கொண்டவராக மருத்துவர் ராமதாஸ் இருக்கிறார். அவருடைய கட்சியும் அப்படித்தான் இருக்கிறது. பாமக செய்யும் இந்த சாதி வெறுப்புக்கு கோவில் நிர்வாகமும் உறுதுணையாக இருக்கிறது. அதனால் மீண்டும் கோவில் நுழைவுப் போராட்டத்தில் நாங்கள் ஈடுபடவிருக்கிறோம். அம்பேத்கர், பெரியார் ஆகியோருடைய போராட்டங்களின் தொடர்ச்சிதான் இது. தமிழ்நாட்டில் பாமகவும் பாஜகவும் தான் சாதி அமைப்பை தூக்கிப் பிடிக்கின்றன.
தான் சார்ந்த சமூக மக்களை பாமக தவறான முறையில் எப்போதும் வழி நடத்துகிறது. வன்னிய இளைஞர்களில் முற்போக்கு பேசக்கூடியவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் பாமகவின் சதியில் மாட்டிக்கொள்ளக் கூடாது. வன்முறையாளர்களை அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். பாமகவின் செல்வாக்கு தற்போது சரிந்து வருகிறது. பாமகவினர் பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். எனவே தங்களுடைய இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக அப்பாவி மக்களுக்கு சாதிவெறியை ஊட்டி, வன்முறையைத் தூண்டி விடுகின்றனர். குடும்ப அட்டையை கிழித்துப் போடுவதெல்லாம் முட்டாள்தனமான நடவடிக்கை.
வன்னிய மக்களும் கல்வி வேலைவாய்ப்பில் முன்னேற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர்களை ஜாதிச் சான்றிதழை கிழித்துப் போடச் செய்வதன் மூலம் என்ன மாற்றத்தை உருவாக்க விரும்புகிறது பாமக? தேர்தலுக்காக மீண்டும் வன்முறை அரசியலைக் கையிலெடுக்கிறார்கள். இந்து அறநிலையத்துறைக்குள் இருக்கும் சாதியவாதிகளை அரசு அகற்ற வேண்டும். பாமக எப்போதுமே சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்றுதான் செயல்படுகிறது. அம்பேத்கரின் சிலையை அதிகமாக வைத்தேன் என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டே அவருடைய கொள்கைகளுக்கு எதிராக செயல்படுகிறது பாமக. பாமகவை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள். அதை மறைப்பதற்காகவே இந்த நாடக அரசியலை நடத்தி வருகிறார்கள்.
விசிகவில் பல தலைவர்களை எங்களுடைய தலைவர் திருமாவளவன் அவர்கள் உருவாக்கி வருகிறார். அதனால்தான் சில நிகழ்ச்சிகளுக்கு இரண்டாம்கட்ட தலைவர்களை அழைக்கச் சொல்கிறார். எங்கள் தலைவர் இன்று அனைவராலும் கொண்டாடப்படுகிறார். அனைவரும் தங்கள் வீட்டில் ஒருவராக அவரைப் பார்க்கின்றனர்.